சி.பா.ஆதித்தனார் நினைவாக சேது கால்வாய்க்கு தமிழன் கால்வாய் என்று பெயர் வைக்க வேண்டும்: கருணாநிதிக்கு, கவிஞர் அப்துல்ரகுமான் கோரிக்கை |
Friday, 28 Sep 2007, [Sindhu] |
தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் 103-வது பிறந்த நாள் விழாவையொட்டி நடந்த இலக்கிய பரிசளிப்பு விழாவில் சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு” ஒரு லட்சம் ரூபாய் பெற்ற கவிஞர் அப்துல் ரகுமான் ஏற்புரை நிகழ்த்திய போது பேசியதாவது:-
முஸ்லிம்களுக்கு ரமலானைப் பொறுத்தவரையிலே 2 பெரும் பரிசுகள். முதல்-அமைச்சர் ரமலான் துவங்குகின்ற நேரத்திலேயே தனி இடஒதுக்கீடு வழங்கி சமுதாயத்திற்கு பரிசினை வழங்கினார். இன்றைக்கு தினத்தந்தி நிறுவனம் இஸ்லாமியர்கள் சார்பாக எனக்கு இந்த பரிசை அளித்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன். அவ்வை நடராசன் என்னை தனது மாணவன் என்று சொல்லலாமா என்று தயங்கி, தயங்கி கேட்டார். தாராளமாக சொல்லலாம். கவியரங்கங்களில் நான் பல வெற்றிகளை பெற்றேன் என்று சொன்னால் அதற்கான ரகசியங்கள், உத்திகளை உங்களிடம் தான் கற்றேன். வைகை ஆற்றின் இக்கரையில் நான் இருந்தேன். அக்கரையில் அவர் இருந்தார். அதனால் என் மீது அவருக்கு அக்கறை அதிகம். அவர் விழாவில் பேசும்போது முதல் வரியில் அவையை எப்படி கவருவது என்று தெரிந்து வைத்திருந்தார். இதை அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். கண்ணதாசன் தலைமையில் வேலூரில் ஒரு கவியரங்கம் நடந்தது. அதன் தலைப்பு `குடும்பக் கட்டுப்பாடு’. எல்லோரும் கவிதை பாடிய பின்னர் நான் கடைசியாக பேச வந்தேன். ஏற்கனவே எல்லோரும் கவிதை கேட்டு சோர்வாக இருந்தார்கள். நான் சொன்னேன், “கல்யாண மண்டபத்தில் கருத்தடை பிரச்சாரம்” என்றேன். இதையெல்லாம் நான் அவரிடம் தான் கற்றுக் கொண்டேன். ஒரு முறை அவர் மீசையை எப்படி வர்ணிப்பது என்று கேட்டார். `வாலிபம் உதட்டில் வரையும் கோடு’ என்று கூறலாமா என்று கேட்டார். நான் `வாலிபம் உதட்டில் வளர்க்கும் கோடு’ என்றேன். அதைக் கேட்டு அவர் துள்ளினார். எனவே நீங்கள் தாராளமாக என்னை உங்கள் மாணவர் என்று சொல்லலாம். நான் எழுதிய “காக்கை சோறு” என்ற புத்தகத்திற்கு தினத்தந்தி நிறுவனம் பரிசு வழங்குகிறது. காக்கைக்கு சோறு வைத்தால் புண்ணியம் என்று நினைத்து சோறு வைத்திருக்கிறார்கள். அந்த காலத்தில் அரசர்கள் பெரிய அரசரவையிலே எங்களைப் போன்ற புலவர்களுக்கெல்லாம் பெரிய யானைகள் எல்லாம் பரிசு கொடுத்திருக்கிறார்கள். இப்போது எனக்கு பரிசு கொடுத்த நிறுவனத்தின் பெயர் `தந்தி’. தந்தி என்றால் யானை என்று பொருள். முன்பு புலவர்களுக்கு யானை கொடுத்தார்கள். இப்போது யானை புலவனுக்கு பரிசு கொடுத்துள்ளது. வேந்தர்களாக முன்னாள் துணை வேந்தர், இன்னாள் துணை வேந்தர், நீதியரசர் என ஒரு அரசவையே கூடி எங்களுக்கு பரிசளித்தது போல இருக்கிறது. சிவந்தி ஆதித்தனார் ஒரு படைவீரர் போல இருக்கிறார் என்று அவ்வை நடராசன் கூறினார். சிவந்தி ஆதித்தனார் குறுநில மன்னர்கள் பரம்பரையில் வந்தவர். எனவே ஒரு அரசவையில் ஒரு அரச குடும்பத்தவரால் தரப்படுகிற மதிப்புமிக்க பரிசாக இதை நாங்கள் கருதுகிறோம். சங்கம் வளர்த்த, தமிழ் வளர்த்த மதுரையில் தான் தந்தியும் வளர்ந்தது. ஆக நான்காவது தமிழ்ச் சங்கம் தந்தி தான். அந்த நிறுவனம் இன்றைக்கு 14 ஊர்களில் கொடிகட்டிப் பறக்கிறது என்று சொன்னால் உண்மையிலேயே நான் வளர்ந்தது மாதிரி, நான் பெருமை அடைந்தது மாதிரி ஒரு உணர்வு எனக்கு வருகிறது. ஆதித்தனார் தான் உண்மையாகவே தமிழர்களுக்கு விடியலைத் தந்த சூரியன். விடியலைத் தந்தது மட்டுமல்ல, சூரியன் சூடு மட்டும் தான் கொடுப்பான். இந்த சூரியன் சூடு மட்டுமின்றி சொரணையும் சேர்த்து கொடுத்தான். அவர் தான் “நாம் தமிழர்” என்ற ஒரு மாபெரும் இயக்கத்தை கொடுத்தார். இப்போது கட்சிக்கு என்னென்னவோ பெயர் வைக்கிறார்கள். என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் கண்ட பேரை சேர்த்து வைத்து விடுகிறார்கள். எவனாவது ஏமாறமாட்டானா என்று. ஆதித்தனார் `நாம் தமிழர்’ என்று வைத்த பெயரை பார்த்து பெரியாரே திராவிட என்ற சொல்லை விட்டுவிட்டு தமிழன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். தந்தி பாமர மக்கள் படிக்கும் பத்திரிகை என்று கூறுவார்கள். நான் 2 தினத் தாள்களில் பணியாற்றியிருக்கிறேன். அலுவலகத்தில் எல்லா டேபிள்களிலும் தினத்தந்தி வைத்திருப்பார்கள். வந்தவுடன் எப்படி செய்தி எழுதுவது என்று இதைப் படித்துவிட்டு பின்னர் எழுதுங்கள் என்பார்கள். 2 அலுவலகங்களிலும் இந்த நிலைதான். இப்போது கூட நான் காலையில் எழுந்ததும் இன்டெர்நெட்டில் ஒரு 12 பத்திரிகைகளை பிரவுஸ் செய்து இந்துஸ்தான் டைம்சிலிருந்து, டைம்ஸ் ஆப் இந்தியா வரை படித்துவிடுவேன். ஆனால் தினத்தந்தி படிக்கவில்லை என்று சொன்னால் அன்றைக்கு எனக்கு விடியாது. அணு ஒப்பந்தம் என்கிறார்கள், என்ன சொல்கிறது என்றால் யாருக்கும் புரியவில்லை என்கிறார்கள். ஆனால் அதே செய்தியை தினத்தந்தியில் அணு ஒப்பந்தம் என்ன என்று 5, 6 வரியில் போட்டுவிடுவார்கள். அந்த கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அந்த பயிற்சி தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரால் கொடுக்கப்பட்டது. சிவந்தி ஆதித்தன் 24 வயதில் நிர்வாக பொறுப்புக்கு வந்தார். முதலாளி நாற்காலியில் உட்கார வைத்து சாவியை கொடுத்திருப்பார் என்று தான் நினைப்பீர்கள். நேராக அச்சுக்கோர்க்கும் இடத்தில் கொண்டுபோய் கம்போஸ் செய்ய பழகிக் கொள்ளும்படி கூறினார். அதன் பிறகு ஒவ்வொரு துறையாக அனுப்பி பயிற்சி கொடுத்த பிறகு தான் நிர்வாக பொறுப்பை கொடுத்தார். அதனால் தான் அவரை யாரும் அசைக்க முடியவில்லை. ஆனால் இப்போது வாரிசு என்று வரும் பலபேர் என்னவென்றே தெரியாமல் மேலே வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். கீழே என்னவென்றே தெரியாது, கீழே விழுந்து விடுவார்கள். முதலாளிக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்பதற்காக அல்ல. முதலாளி என்ற எண்ணம் முதலாளிக்கு இருக்க கூடாது. தொழிலாளியாக இருந்து பழக வேண்டும். அந்த சமத்துவம் இருக்க வேண்டும். அவர்களது கஷ்ட, நஷ்டங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்ற அற்புதமான நோக்கத்தினால் தான் அத்தகைய பயிற்சிகளை அளித்தார். அந்த ரிசல்ட் இப்போது தெரிகிறது. சி.பா.ஆதித்தனார் 3 இடங்களில் தான் பத்திரிகைகளை தொடங்கினார். தந்தை 3 அடி தான் பாய்ந்தார், தனயன் 14 அடி பாய்ந்திருக்கிறார். சிலபேர் என்னமோ சொல்கிறார்கள், ஒரு கோடி வாசகர்களுக்கு மேல் இருக்கிறார்கள். தமிழர்கள் அதிகமாக படிக்கிற பத்திரிகை, அதுமட்டுமல்ல, அதனால் (தினத்தந்தியால்) தமிழ் படித்த தமிழர்கள் அதிகம். தந்தி ஒரு திறந்தவெளி பல்கலைக்கழகம் என்றே சொல்லலாம். மொழி என்று சொன்னாலே அது நாங்கள் எழுதுகிறோமே அதுவல்ல, சாதரணமாக பேசுகிறார்கள் அல்லவா அதுதான் மொழி. நாங்கள் ஒரு செயற்கை மொழியை உண்டாக்கி எழுதிக் கொண்டிருக்கிறோம். அது நிற்காது. உயர்வுடைய மொழி எது என்று கேட்டால், அது மக்கள் பேசுகிற மொழி. இந்த ரகசியத்தை புரிந்து கொண்டவர் சி.பா.ஆதித்தனார். ரிக்ஷாக்காரனுக்கு நீங்கள் எழுதுவது புரிய வேண்டும், அப்போது தான் இது உண்மையான செய்தித் தாள். இல்லை என்றால் வெறும் சுண்டல் கட்ட வைத்துக் கொள்ள வேண்டியது தான். பெரும் புலவன், 30 ஆண்டுகள் தமிழ் போதித்தவன், இன்னும் படித்துக் கொண்டிருப்பவன் ஆனாலும் கூட தந்தியை நான் படிக்கிறேன். செய்திக்காக மட்டுமல்ல, மொழியை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதற்காக நான் படிக்கிறேன். பிறருக்கு புரியாமல் எழுதச் சொன்னால் நான் நன்றாக எழுதுவேன். ஆனால் என்ன புரிய வேண்டும், மக்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்ற மாபெரும் கலையை பத்திரிகை மூலம் உருவாக்கியவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். லட்சக்கணக்கான வருமானம் தருகிற தொழிலை விட்டுவிட்டு இந்த இனத்துக்காக வந்த, உண்மையான இன உணர்வு கொண்டவர் அவர். இதனால் பெரும் கடனாளியாக ஆனவர். பல்வேறு போராட்டங்கள் நடத்தி சிறை சென்றவர். தலைப்பு தமிழில் எழுத வேண்டும் என்று சொன்னவர் அவர். அதற்காக தனது இனிஷியலை தமிழில் முதலில் மாற்றினார். எல்லாம் தமிழ் பெயரை வைப்பார். நாம் தமிழர் இயக்க தலைமை நிலையம் `தமிழர் இல்லம்’ இயக்க வார இதழ் `தமிழ்க் கொடி’ பதிப்பகம் `தமிழ்த் தாய் பதிப்பகம்’. தமிழ் கலையை, பண்பாட்டை மீட்டுருவாக்க வேண்டும் என்ற மாபெரும் லட்சியத்தை உருவாக்கியவர். சடுகுடு தமிழர் விளையாட்டு என்று அதனை ஊக்கப்படுத்த தமிழ்நாடு முழுவதும் போட்டிகளை நடத்தியவர். இப்போது அரசியல் தலைவர்கள் சடுகுடு விளையாடுகிறார்கள். இங்கிருந்து அங்கு ஓடுகிறார்கள். அங்கிருந்து இங்கு ஓடி வருகிறார்கள். அங்கு அமுக்கினால் அங்கேயே விழுந்து விடுகிறார்கள். தமிழர்களுக்கு நலன் விளைவிக்கக் கூடிய, தமிழர்களுக்கு பொருளாதார வசதிகளை ஏற்படுத்தித் தரக்கூடிய ஒரு அற்புதமான திட்டத்தை, ஏதோ சொல்லி, எதையோ காரணம் காட்டி இது தமிழர்களுக்கு கிடைத்துவிடக் கூடாது என்று ஒரு மாபெரும் செயல் நடந்து கொண்டிருக்கிறது. அன்றைக்கே தமிழர் தந்தை சேது கால்வாய் என்பது தமிழர்களின் வளர்ச்சிக்கு உகந்தது, அது வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த கால்வாய் உருவானால் அதற்கு `தமிழன் கால்வாய்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னவர் ஆதித்தனார். முதல்-அமைச்சர் கலைஞர் அவர்களுக்கு கோரிக்கையாக வைக்கிறேன், சேது சமுத்திர திட்டம் நிறைவேறும் போது, நிறைவேறும், நிறைவேற வைக்க வேண்டும், நிறைவேறும் பொழுது சி.பா.ஆதித்தனார் நினைவாக, அவர் இந்த இனத்துக்காக பாடுபட்டதன் நினைவாக அந்த கால்வாய்க்கு `தமிழன் கால்வாய்’ என்று பெயர் வைக்க வேண்டும். பதவியை தூக்கியெறிந்தவர் அதுமட்டுமல்ல, சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று சொல்ல வேண்டும் என்று சொன்னவரும் சி.பா.ஆதித்தனார் தான். அதற்காக 15 ஆயிரம் கையெழுத்து வாங்கி காமராஜரிடம் கொடுத்தவர். அவருடைய விருப்பம் கழக ஆட்சி ஏற்பட்டு முதல் சட்டசபை தலைவராக அவர் வந்து அமர்ந்த போது அவரது கண்முன்னாலேயே அந்த சட்டம் நிறைவேறியது. இந்தி எதிர்ப்பு போராட்டத்திலே சிறை சென்றிருக்கிறார். பாட்டாளிகளுக்காக பாடுபட்டிருக்கிறார். வெறும் செய்தித்தாள் ஆசிரியர் மட்டுமல்ல, பனைமர வரிக்காக தன்னுடைய பதவியை தூக்கி எறிந்திருக்கிறார். உலகப் போரின் போது வைக்கோலை கொண்டு வந்து கூழாக்கி காகிதம் தயாரித்து அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். வைக்கோலை தின்று விட்டு பசு தான் பால் தரும். ஆனால் தினத்தந்தி அலுவலகத்திற்குள் வைக்கோல் லாரி செல்லும், அது மறுநாள் பேப்பராக வெளிவரும். நட்சத்திரக் குறியிட்டு ஒரு செய்தியை வெளியிட்டு இந்த செய்தி மற்ற பத்திரிகைகளில் நாளை தான் வரும், என்று அந்த கலையிலே முன்னே நின்றவர். யாராவது விளம்பரம் இலவசமாக போடுவார்களா? டி.கே.சண்முகம் நாடகம் தமிழனுடைய கலைகளுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதற்காக காசு வாங்காமல் விளம்பரம் செய்தார். இன்றைக்கு அசைக்க முடியாத ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது தினத்தந்தி தான். 4-வது அரசாங்கம் என்று பத்திரிகைகளை சொல்வார்கள். அது நினைத்தால் மற்ற மூன்றையும் கவிழ்த்துவிடும். அதுவும் தந்தி நினைத்தால் ஒரு ஆட்சியையே அமைக்க முடியும். அமைத்திருக்கிறது. காங்கிரஸ் நண்பர்கள் இங்கு இருந்தால் தெரிந்திருக்கும், அந்த வலி உள்ளே இருக்கும். 1952- பொதுத் தேர்தலில் காங்கிரசை தோற்கடித்தது. அன்று ஐக்கிய முன்னணி அமைந்ததால் ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வி என்ற திட்டத்தை தோற்கடித்தவர். தி.மு.க. வெற்றிக்கு தந்தி ஆற்றிய பணி சாதாரணமானது அல்ல. அவர்கள் நினைத்தால் ஆட்சியை அமைக்கலாம், கீழேயும் இறக்கலாம். அவ்வளவு சக்தி அதற்கு உள்ளது. சி.பா. ஆதித்தனார் பொதுக் கூட்டங்களில் பேசும் போது, வீட்டிற்கு சென்றதும் பெண்கள் ஆதித்தனார் என்ன பேசினார் என்று கேட்டால், 20 வருடமாக தோசை கருகிக் கொண்டு இருக்கிறது, தோசையை திருப்பிப் போடச் சொல்லுங்கள். அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பார். அதைப் போல சொன்னார்கள், பெண்கள் புரிந்து கொண்டார்கள். புரிந்து கொண்டது மட்டுமல்ல, தோசையை திருப்பி போட்டார்கள். அன்றைக்கு திருப்பியது தான். சட்டசபை தொடங்கும் போது திருக்குறளை ஒலிக்கச் செய்தவர் அவர். இதை கேட்டதும் அண்ணாவும், கருணாநிதியும் சிலிர்த்தார்கள். ஆங்கிலத்திலும், ஆங்கிலம் தெரியாதவர்கள் அரைகுறை ஆங்கிலத்திலும் நடந்து கொண்டிருந்த சட்டசபையை தமிழிலேயே நடத்த ஏதுவாக அனைத்தையும் மொழி பெயர்த்துக் கொடுத்தார். இதைக் கேட்ட அண்ணா சட்டசபையில் தமிழ்த்தாயே வந்து பாடம் நடத்துவது போல இருக்கிறது என்றார். கருணாநிதி ஆதித்தனார் சட்டசபையில் நாயகராக அமர்ந்திருக்கிற காரணத்தாலே தமிழ் மணம் கமழ்கிறது என்றார். அப்போது அமைச்சர்களை கனம் அமைச்சர்கள் என்று தான் சொல்வார்கள். அப்போது அண்ணா மாதவனையும், சாதிக்பாட்சாவையும் கனம் அமைச்சர்கள் என்று கூறும்போது வேடிக்கையாக இருக்கிறது என்பார். காரணம் இருவரும் ஒல்லியான உருவம் கொண்டவர்கள். அந்த சிரமம் வேண்டாம் என்று அமைச்சர்களின் கனத்தை குறைத்து மாண்புமிகு என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் சி.பா.ஆதித்தனார். நான் நினைக்கிறேன், இதற்கெல்லாம் காரணம் அவரது சொந்த ஊர் காயாமொழி. காய்ந்த மொழி பேசியதே இல்லை. காயா மொழியாகிய கனிமொழி பேசியவர். 12 ஆண்டுகாலம் தொடர்ந்து இந்த பரிசை வழங்கி வருகிறார்கள். ஆரம்பத்தில் ரூ.50 ஆயிரம் வழங்கியிருக்கிறார்கள். விலை ஏற ஏற, பாவம் இந்த புலவர்கள் என்று பரிசு தொகையையும் ஏற்றி, இப்போது ஒன்றரை லட்சம் வழங்குகிறார்கள். இப்போது விலை இன்னும் அதிகம் ஏறிவிட்டது. எங்களுக்கு பரவாயில்லை. வரப்போகும் தலைமுறைக்கு, ஞானபீட விருதுக்கு 5 லட்ச ரூபாய் வழங்குகிறார்கள். நாங்கள் தினத்தந்தியை ஞானபீடமாக நினைக்கிறோம். அவ்வளவு தான் சொல்வேன். நீங்கள் செய்வீர்கள், அந்த ஆற்றல் உங்களுக்கு உண்டு. 1997-ல் கலைஞருக்கு அளித்த பரிசு. ஞானசம்பந்தனார், மு.மு.இஸ்மாயிலுக்கு அளித்த பரிசு. எனக்கு தகுதி இருக்கிறதோ, இல்லையோ கொடுத்தீர்கள், ரொம்ப நன்றி. எந்த இனம் அறிஞர்களை பெருமைப்படுத்துகிறதோ, அது உயர்ந்த பண்பாடு உடைய இனமாக வேகமாகிக் கொண்டு வருகிறது. எரிகிற விளக்குக்கு எண்ணை ஊற்றுவது போல அல்ல, அணைந்து கொண்டிருக்கிற விளக்குகளுக்கு தூண்டி எண்ணை ஊற்றுவது போலத் தான் இத்தகைய பரிசளிப்புகள். இந்த சமுதாயத்திற்கு மிகப்பெரிய வலிமை வாய்ந்த படையாக தந்தி நிறுவனம் இருக்க வேண்டும். தமிழர்களின் பண்பாட்டு படையாக தினத்தந்தி திகழ வேண்டும். இவ்வாறு கவிக்கோ அப்துல் ரகுமான் பேசினார் |
Posted by naseeth on December 15, 2011 at 12:46 pm
உங்கள் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்தும் எழுதுங்கள். நன்றி
Posted by Krishnasamy on March 1, 2013 at 7:32 am
arumaiyaana sorpolivu
Posted by Muthu Kumar on January 25, 2016 at 11:09 am
If any body having Kaviko’s son in law phone number.Please reply to mechcivilcad@gmail.com.I am one of his childhood friend.I wish to contact him.
Posted by jairajkumar on July 2, 2017 at 6:05 am
கவிக்கோ அப்துல் ரகுமான், ஆசிரியர்