தமிழிலக்கிய வரலாற்றில் நீ ஒரு தனிப் பறவை!

arr-2

மதுரையில் பிறந்த
மதுரம் நீ!
அதன் சாரம்,
புதுகையில் இருந்து
ஊற்றெடுத்த தென்பதுன்
பூர்வீகம்.
உர்தூ குடும்பத்து
உதயத்தை
உவகை பொங்க
தமிழ்த்தாய்தான்
தனதாக்கிக் கொண்டாள்!
வைகைக் கரையில் தொடக்கம்…
வையகக் கரையெங்கும் தமிழ் முழக்கம்!
ஆற்றில் வருகின்ற
அலையெல்லாம்
புதிதானாலும் அதன்
பொதுப் பெயர்
தண்ணீரே.
நீ,
தண்ணீர் மட்டும் அல்ல;
பாலாய்,தேனாய்ப்
பாயத் தெரிந்தவன்! (1)
உன் சிந்தனை,
செந்தமிழைச்
செழுந்தமிழாக்கியது;
மனதை
உழுந்தமிழாக்கியது.
அதனால்
உள்ளங்கள்,
வெளிச்ச
வெள்ளங்களாயின!
முள் கிரீடங்களைக்
கழற்றவும்
சிலுவைகளை இறக்கவும்
எல்லாருக்கும்
சொல்லிக் கொடுத்தவன் நீ!
இலக்கியப் பயணம்
மேற்கொண்டோரெல்லாம்
இலக்கை அடைந்தவர்கள்
இல்லர்.
அது உனக்கு
அருளப்பட்டது.
ஆனாத நூற்கடலை
அளித்த தமிழமுதும்
முன்னர்
காணாத தேன்துளி நீ!
கண்டார்க்கோ புது ஒளி நீ!
(2)
பரிசோதனை முயற்சிகள்
பரிகாசம் ஆவதுண்டு;
உன்
பரிசோதனைகள் எல்லாம்
தமிழுக்குப்
பரிசாக ஆனதென்ன!
எழுதுகோலை
நெம்புகோலாக்கி
இலக்கிய உலகை
இடம்மாற்றி வைத்தவனே,
உன்
அறிவின் அடர்த்தி
விளைவித்த
வேறுபாடுகளால்
அம்மி மிதந்தது;
சுரையும் ஆழ்ந்தது!
பயணத்தைப்
”பால் வீதி”யில்
தொடங்கிய நீதான்,
நிரந்தரமான
”நேயர் விருப்பம்”.
உன் சுட்டுவிரல் அசைவு
ஆலாபனை;
நீ சொல்வதெல்லாம் கவிதை
ஆராதனை.
(3)
கதவுகள் இல்லாக்
கருவூலமே,
உன்னைக்
கொள்ளையடிப்பதில்
இருக்கிறது எம்
குதூகலம்!
சுயத்தை இழக்காதவை உன்
சொற்கள்.
நயத்தை இழக்காதது உன்
நாகரிகம்.
அல்லாஹ்வின்
பயத்தை இழக்காதது உன்
பயணம்-பாதை…
உன் இல்லமெனும்
`ஹிரா’ குகையிலிருந்து
“பாலை நிலா”வின்
வெளிச்சத்தை வெளிப்படுத்து,
உன்
பரிசாக.
தமிழிலக்கிய வரலாற்றில்
நீ ஒரு
தனிப் பறவை;
ஆயினும் உன்பின்னால்
ஆயிரம் ஆயிரம் பறவைகள்!

—ஏம்பல் தஜம்முல் முகம்மது

yembal

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: