கவிக்கோ நினைவேந்தல் நெகிழ்வுகள்…

 

 

தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும், இலக்கிய ஆளுமைகளும் சென்னை காமராஜர் அரங்கின் மேடையை தன்வசமாக்கிக்கொண்ட நிகழ்வு அது. இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட கவிக்கோ அப்துல் ரகுமானின் நினைவேந்தல் நிகழ்ச்சி, புதிய விதையாக அரங்கேறியுள்ளது. இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சி. இலக்கிய நண்பர்கள் ஓர் அமர்விலும், அரசியல் நண்பர்கள் இன்னோர் அமர்விலும் பேசினார்கள். கவிக்கோவுடனான சுவாரஸ்ய அனுபவங்கள், அவரது ஆசைகள், கோபங்கள், ஆற்றல்கள் என வந்திருந்த அனைவரும் அவரைப்பற்றிய தருணங்களை சிலாகித்தனர்.

முதல் அமர்வில், கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், அறிவுமதி, பழனிபாரதி மற்றும் இயக்குநர் லிங்குசாமி, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் மைக் பிடித்து, கவிக்கோ பற்றிய நினைவுகளை பகிர்ந்தபோது அரங்கம் அதிர்ந்தது. அரசியல் அமர்வில், தோழர் நல்லகண்ணு, வைகோ, கி.வீரமணி, துரைமுருகன், திருமாவளவன், திருநாவுக்கரசர், கவிஞர் வைரமுத்து, பேரா.அருணன், காதர் மொய்தீன் என பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

விழாவுக்கு தாமதமாக வந்த துரைமுருகன், அமர்ந்திருந்த அனைவருக்கும் கைகுலுக்கிக்கொண்டே வந்தார். சின்ன சிரிப்புடன் வைகோ கைகொடுக்க, வைகோவை இழுத்துக் கட்டிப்பிடித்தார் துரைமுருகன். இதை சற்றும் எதிர்பார்க்காத வைகோ குஷியாகிவிட்டார். துரைமுருகன் வந்தபோது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசிக்கொண்டிருந்தார். அவர் முடித்ததும் வைகோ பேசவிருந்தார். ஆனால், துரைமுருகன் பேச அழைக்கப்பட்டதும், “லேட்டா வந்து சீக்கிரம் பேசுறீங்களே…” என்று கமெண்ட் செய்து அரங்கத்தை கலகலப்பூட்டினார் வைகோ.

அரசியல் அமர்வில் மொத்தக் கூட்டத்தையும் தன் பேச்சால் வசப்படுத்தினார் வைகோ. எந்தவிதமான குறிப்பும் இல்லாமல் அவர் பகிர்ந்த ஒவ்வொரு விஷயங்களையும், கவிக்கோ நேரில் இருந்து பார்த்திருக்க வேண்டும். “மரபுக் கவிதைகளை தாண்டி புதுக்கவிதைகளைத் தந்தவர் கவிக்கோ. என்னை பலநேரங்களில் ஊக்குவித்தவர். புகாரி ஓட்டலில் ஒருமுறை அவருடன் சாப்பிட்டுக் கொண்டே பேசியபோது, தியாகராசர் கல்லூரிக்கு அவர் பெரியாரை அழைத்து வந்தது, பேராசிரியராக அவர் பணியாற்றிய காலம், அறிஞர் அண்ணாவைச் சந்தித்த சம்பவம், அண்ணன் கலைஞருடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு என கவிக்கோ பகிர்ந்ததை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறேன்.

தமிழுக்கு அபாயங்கள் சூழ்ந்திருக்கும் இந்தச் சூழலில் நீ இல்லை. ஆனால், நீ படைத்தவை எங்களைக் காக்கும். ரகுமான் எழுதிய வரிகள் ‘தோல்வியின் வெற்றி’; என்னைப் போன்றவர்களுக்குப் பொருத்தமான வரிகள் அது. அவரது படைப்புகளில் நீங்கள் உலகத்தையே பார்க்கலாம். அவரது வரிகளில் புத்தர், கன்பூசியஸை சந்திக்கலாம், உலக கவிஞர்களுடன் பேசலாம், ரியலிச, சர்ரியலிசங்களை அலசலாம். இங்கிருக்கும் கவிஞர்கள் யாரும் கோபித்துக்கொள்ளக் கூடாது. கவிக்கோவைப் பற்றி ஒருமுறை கவிஞர் வாலி குறிப்பிடும்போது, ” ‘பொருள்’ வைத்தால் பாடுபவன் நான்… கவிதையில் பொருள் வைத்துப் பாடுபவன் நீ” என சிரித்துக்கொண்டே சொன்னார். நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள் கவிக்கோ… இந்த மக்களின் கண்கள் உங்களை வாசிக்கட்டும்” என்று கண்கலங்க முடித்தார் வைகோ.

கவிஞர் வைரமுத்து பேசியபோது, “அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன். எங்களையெல்லாம் விடச் சிறந்த கவிஞர் கவிக்கோதான். அப்துல் ரகுமான் மீது நிகழ்த்தப்பட்ட மரணம் கொஞ்சம் சூழ்ச்சியானது. கவிஞர், பேராசிரியர், மார்க்கவாதி, சிந்தனைவாதி, சிறந்த மனிதர் என ஒரே நேரத்தில் 5 ஆளுமைகளை வீழ்த்தி சூழ்ச்சி செய்திருக்கிறது மரணம். வைகோ பேச்சில் நெகிழ்ந்து போயிருந்தேன். அவர் பேசியபோது நான் நினைத்தேன்… ‘வைகோ மட்டும் நீண்டநாள் உயிரோடு இருந்தால், அவரை நம்பி பல கவிஞர்கள் சாகலாம்’ என்று. பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞர்கள் அவரையே நகல் எடுப்பார்கள். ஆனால், பாவேந்தரை உள்வாங்கிக்கொண்டு, கவிதைகளில் புதுத்தடம் காண்பித்தவர் கவிக்கோ. தமிழ் வேர்களில், புதிய பூக்களைப் பூக்கச்செய்ய முயற்சி செய்தவர் அவர். தமிழ்க் கவிதைகளில் நவீனங்களைப் புகுத்த நினைத்தவர் கவிக்கோ. தனது கவிதைகளின் முதல் வரியிலேயே தான் வைத்திருக்கும் பிரம்மாஸ்திரத்தை விட்டுவிடும் தைரியம் கவிக்கோவிடம் இருந்தது.

ஒருமுறை ராமாயணம் தொடர்பான கவியரங்கத்தில் அவர்தான் நடுவர். அங்கிருந்தவர்கள் ஒரு இஸ்லாமியனுக்கு ராமாயணம் பற்றி என்ன தெரியும் என்பதுபோல் பேசினார்கள். இதுகுறித்து பதிலளித்த கவிக்கோ, ‘எனக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம் எனச் சிலர் கேட்கலாம். ‘ரகு மானின் பின்னால் போனதுதானே ராமாயணம்’, என்றார். கூட்டம் அதிர்ந்தது. ஆம். ரகு வம்சத்தைச் சேர்ந்த ராமன், ஒரு மானின் பின்னால் போன கதைதானே ராமாயணம்! இதை தனது பெயரை வைத்து திருப்பியடித்தார் கவிக்கோ அப்துல் ரகுமான். ஒரு கவியரங்கத்துக்கு தலைமை தாங்க நேரத்துக்கு வந்துவிட்டார் கலைஞர். கவிக்கோ மட்டும் தாமதமாக வந்தார். மேடையில் பேசிய கலைஞர், ‘என்னைக் காக்க வைத்து விட்டீர்களே’ என்றார், இதற்குப் பதிலளித்து கவிபாடிய கவிக்கோ, ‘வாக்களித்தோம்… வணங்கி வரவேற்றோம்… எங்களைக் ‘காக்க’த்தானே உங்களை வைத்தோம் காக்கமாட்டீரா?’ என்றவுடன், வெடித்துச் சிரித்துவிட்டார் கருணாநிதி. கவிக்கோவுக்கு 80-வது ஆண்டுவிழா இதே அரங்கில் நடந்தது. ஆனால், இவ்வளவு கூட்டம் இல்லை. ஒரு கவிஞன் மறைந்ததும் அவனைக் கொண்டாடித் தீர்க்கிறோம். இனி இதுபோன்ற சாதனையாளர்கள் வாழும்போதே அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடத்திவிடுங்கள். அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் போன்றவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சுத்தக் கலைஞர்களுக்கு நாம் கொடுப்பதில்லை. கவிக்கோவுக்கான இந்த இரங்கல், மவுனத்தையும் அசைக்கிறது. விசில் சத்தம், கரவொலிகள் என இரங்கல் கூட்டத்திலும் மரபுகளை உடைத்திருக்கிறார் கவிக்கோ” என்றார் நெகிழ்ச்சியாக.

ஜவாஹிருல்லா பேசியபோது, “இங்கிருக்கும் பலருக்கும் இல்லாத சிறப்பு எனக்கு உண்டு. வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் கவிக்கோ அப்துல் ரகுமானுடன், பேராசிரியராக சாக்பீஸ் பிடித்தவன் நான்” என்றார். மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு, “கவித்துறையில் மட்டும் தனது கவனத்தைச் செலுத்தியவர் கவிக்கோ. மக்களின் குரலாக ஒலிக்கக்கூடியவர் அவர்”, என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே சாதி. ஒடுக்குகிறவர்கள் ஒரே மதம் என்று என்னுடைய பொன்விழாவில் சொன்னார் கவிக்கோ. அவர் ஒரு போராளியாக விளங்கியவர். இஸ்லாமியராகப் பிறந்திருந்தாலும் ஒரு பெரியாரியவாதியாகவும் மார்க்சியவாதியாகவும் அம்பேத்கரியவாதியாகவும் தமிழராகவும் வாழ்ந்தவர் கவிக்கோ” என்றார்.

இறுதியாக நிகழ்ச்சி முடியும்போது மணி இரவு 11. நல்லகண்ணு, வைகோ, திருமா என பலரும் மேடையில் மௌனமாக அமர்ந்திருந்தனர். மொத்தக் கூட்டமும் கலையாமல் அப்படியே நெகிழ்ந்து உட்கார்ந்திருந்தது. விழா பேனரில் அச்சிடப்பட்டிருந்த கவிக்கோ சலனமில்லாத புன்னகையோடு நிகழ்வை பார்த்துக்கொண்டிருந்தார். வைரமுத்து சொன்னதுபோல், கவிக்கோ போன்ற ஒரு மனிதருக்கு அவர் இருக்கும்போதே இரங்கல் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும் போல!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: