Archive for the ‘கவிக்கோவுடன் ஒரு சந்திப்பு’ Category

கவிக்கோவுடன் ஒரு சந்திப்பு

kavi4 

– தஞ்சை ரேகா

‘வெற்றி பல கண்டு நான்
விருது பெற வரும் போது
வெகுமானம் என்ன வேண்டும்’
எனக் கேட்டால்,
அப்துல் ரகுமானை தருக என்பேன்’
– முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பாராட்டு இது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் 1937ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி பிறந்தவர் அப்துல் ரகுமான். தமிழில் பி.ஹெச்டி பட்டம் பெற்று வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் 30 ஆண்டுகாலம் பேராசிரியராக பணி புரிந்தார். இப்போது தன் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியையும் இலக்கிய சேவைக்கு அர்பணித்துவிட்டார்.

கவிதை தொகுப்புகள், கட்டுரை நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் என பல வடிவங்களில் தன் கவிதை இலக்கியத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலக்கியத்துக்கான பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ள கவிக்கோ தமிழ்சிகரம் வாசகர்களுக்காக இங்கே…

கேள்வி : இலக்கியம், கவிதை மீது எப்படி ஈடுபாடு வந்தது?

பதில் : என் தாத்தா பாரசீகம், உருதில் கவிதை எழுதுவார். அவருடைய எழுத்துக்கள் தான் சிறுவயதிலேயே கவிதைகள் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. உருது மொழியில் கவிதை எழுத வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். 11வது வயதில் கவிதை எழுத ஆரம்பித்தேன்.

எங்கள் வீட்டருகே இருந்த படிப்பகத்துக்கு தினமும் போவேன். அங்கிருந்த புத்தகங்கள் ஒவ்வொரு நாளும் ஒருவிதமான விசயங்களை எனக்குத் தெளிவுபடுத்தின. அதன் விளைவு பள்ளியில் படிக்கும் போதே கவிதைகள் எழுதி பல பரிசுகளை பெற்றேன்.

தமிழ் இலக்கியத்தின் மீது என் கவனம் திரும்பியது. ஆர்வம் அதிகரித்ததால் தியாகராஜர் கல்லூரியில் சிறப்பு தமிழ் படித்து பட்டம் பெற்றேன்.

கல்லூரியில் கவிதை, கட்டுரை போட்டி என்றால் என் பெயர் நிச்சயம் இருக்கும். நிறைய போட்டிகளில் முதல் மாணவனாக வெற்றி பெற்றேன். அந்த வெற்றிகள் தான் கல்லூரிக் கவிஞர் என்ற பட்டத்தை அப்போதே எனக்கு பெற்று தந்தன. தமிழ் இலக்கியம் தான் என்னை தரணிக்கு அடையாளம் காட்டியது-.

கேள்வி : தமிழ் மீது உங்களுக்கு ஏற்பட்ட தாக்கத்தை உங்கள் சமூகம் ஊக்குவித்ததா?

பதில் : தமிழ் படிக்கிறாயே, அதற்கு வேலையே கிடைக்காது என்று என்னிடம் பலர் சொன்னார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு மனிதனுக்கு எதில் விருப்பம் அதிகம் உள்ளதோ, எதில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அதில் சாதித்துவிட வேண்டும். இலக்கியத்தில் நாட்டம் இருந்ததால் அதில் சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியுடன் இறங்கினேன்.

என் நம்பிக்கை வீண் போகவில்லை. நான் படித்த தமிழ் இன்று என்னை உலகம் முழுவதும் அழைத்துச் சென்றுள்ளது. தன்னம்பிக்கையை தவற விடாமல் செயல்பட்டேன். நினைத்ததை அடைந்தேன்.

கேள்வி : மற்ற கவிஞர்களின் கவிதைக்கும், உங்களின் கவிதைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பதில்: என் கவிதைகளை படிக்கும் வாசகர்கள் தான் இதற்கு சரியான பதிலை தர முடியும். கவிதைகளை சுருக்கி இருசீர் ஓர் அடி என்ற புதிய சிறிய வடிவத்தில் கவிதைகள் எழுதி தமிழுக்கு அளித்தேன். இதுதான் எனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்று நினைக்கிறேன்.

கேள்வி : தங்களுக்கு கிடைத்த விருதுகளில் மிகச் சிறந்தது என்று எதைக் கருதுகிறீர்கள்?

பதில் : புதுக்கவிதைக்காக 1989ம் ஆண்டு தமிழ்பல்கலைக்கழகம் வழங்கிய தமிழன்னை விருது. 1997ம் ஆண்டு வாங்கிய கலைஞர் விருது. 1999ம் ஆண்டு டில்லியில் வாங்கிய சாகித்ய அகாடமி விருதுகளை சொல்லலாம்.

கேள்வி : நூல்கள், கட்டுரைகள்?

பதில் : 9 கவிதை தொகுப்புகள், சொந்த சிறைகள் என்ற ஒரு வசனத்தொகுப்பு, 17 கட்டுரை நூல்கள் எழுதியுள்ளேன். 50க்கும் மேற்பட்ட ஆய்வு சொற்பொழிவுகள் நடத்தியுள்ளேன்.

கேள்வி : இலக்கியம் தவிர வேறு பணிகள்?

பதில் : பல இதழ்களில் பணியாற்றி இருக்கிறேன். 29 ஆண்டுகள் கல்லூரியில் ஆசிரியர் பணி. தமிழில் இதுவரை யாரும் ஆய்வு செய்யாத கவிதைக் குறியீடு பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டத்துக்காக சென்னை பல்கலைக்கழகத்தில் புதுக்கவிதையில் குறியீடு என்ற தலைப்பில் ஆய்வேடு அளித்துள்ளேன்.

தமிழக அரசின் உருதுமொழிக் குழு உறுப்பினராக பணியாற்றியது மற்றும் தற்போது செம்மொழிக்காக மத்திய அரசு அமைத்த தமிழ்மொழி மேம்பாடு வாரிய உறுப்பினராக பணியாற்றுவது என்று பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

கேள்வி : இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு?

பதில் : ஒரு நாட்டின் வளர்ச்சியே அந்நாட்டில் உள்ள இளைஞர்கள் கையில் தான் உள்ளது. நினைத்தது நடக்கவில்லை என்றால் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ற ரெடிமேட் வார்த்தையைத்தான் இளைஞர்கள் சொல்கின்றனர். வெற்றிக்கான சந்தர்ப்பத்தை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஏராளமான சந்தர்ப்பங்கள் உள்ளன. மூடிய கதவுகளையே இளைஞர்கள் தட்டிக் கொண்டு இருக்கிறார்கள். கதவுதான் மூடி உள்ளதே அதை விட்டு விடுங்கள். திரும்பி பாருங்கள் ஏராளமான கதவுகள் திறந்து உள்ளன. அதில் நுழைய முயற்சி செய்யுங்கள்.

இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள். முயற்சி செய்தால் நவீனயுகத்தில் எவ்வளவோ சாதனைகளை செய்யலாம்.

சுயதொழில் செய்து முன்னேற போகிறேன் என்று சிலர் சொல்வார்கள். சுய முன்னேற்றம் என்பது தற்போது சுயநலம் என்ற அளவுக்கு போய்விடுகிறது. சுய முன்னேற்றம் என்பது சமூகத்தோடு நாட்டையும் முன்னேற்றும் விதமாக இருக்க வேண்டும்.

நடந்து செல்லும்போது சாலையில் எச்சில் துப்பாமல் இருப்பதும், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதும் கூட சமூகத்துக்கு நாம் செய்யும் சேவை தான்.

கேள்வி : இந்திய மக்களிடையே நாட்டுப்பற்று எந்தளவில் உள்ளது?

பதில் : சுதந்திர தினம், குடியரசு தினத்தில் கொடியேற்றி சல்யூட் அடிப்பது மட்டும் தான் நாட்டுப்பற்று என்று அர்த்தமாகிவிட்டது. சமீபத்தில் கனடாவுக்கு சென்றிருந்தேன். அங்குள்ள ஒரு பூங்காவை சுற்றி பார்த்த போது ஒரு குப்பையை கூட காணமுடியவில்லை. அந்த காட்சி என்னை பிரமிக்க வைத்தது

நன்றி : தமிழ்சிகரம்.காம்