கவிக்கோ….!
வைகை நதிக்கரையில் மலர்ந்து; தமிழ்ப் பொய்கையில் ஊறித் திளைத்த அனிச்ச மலர்.
“பால்வீதி”யை படித்துப் பாருங்கள். இந்த முப்பால் அருந்திய மூத்தக் குழந்தை, தமிழ்ப்பால் கொண்டிருக்கும் தாகம் தப்பாமல் விளங்கும்.
இவன் சிறகுகளை விரித்த பிறகுதான் எத்தனையோ பேர்களுக்கு பறக்கவே ஆசை பிறந்தது.
“அந்தமானைப் பாருங்கள் அழகு”. ஆசுகவி கண்ணதாசன் சொன்னது. அட…! அந்தமான் கிடக்கட்டும்… அந்தமான்… இந்த இனமானத் தமிழன் எங்கள் ரகுமானின் இன்பத்தமிழ் அந்தமானைக் காட்டிலும் அழகோ அழகு.
கலைஞர் சொன்னதுபோல் ரகுமானோ கன்னித்தமிழுக்கு கிடைத்த வெகுமானம்.
பாரதிதாசன் கூறிய “அழகின் சிரிப்பை”; – தமிழ் அழகின் சிரிப்பை – இவன் கைவண்ணத்தில்தான் மின்னக் கண்டேன்.
மனிதம் பாதி; மகத்துவம் பாதி; கலந்து செய்த கலவை இவன்.
ஆம். இவன் கலப்பட மனிதன். இன்பத்தமிழை “ஆளவந்தான்” இவன்
“சிரிப்பு பாதி; அழுகை பாதி; சேர்ந்ததல்லவோ மனித ஜாதி,
நெருப்பு பாதி; நீரும் பாதி; நிறைந்ததல்லவோ மனித நியதி” பாடி வைத்தான் பாட்டரசன் கண்ணதாசன்.
இந்தக் கலவை மனிதன் கால்வாசி பாப்லோ நெரூடா, கால்வாசி ரூமி, கால்வாசி தாகூர், மீதி கால்வாசி இக்பால்.
“கவிதைக்கு பொய்யழகு” என்றான் கவிஞர் வைரமுத்து. அது பொய்யென்றுதான் நினைக்கிறேன். அதெப்படி இவன் கவிதை மட்டும் உண்மையே பேசுகிறது… ..?
இயக்குனர் ஒருவர், கவிஞர் வாலியிடம் ‘கன்னம்’ என்ற சொல்லுக்கு எளிமையான வார்த்தையாகப் போடுங்கள் என்றாராம். ‘கன்னம்’ என்பதே எளிமையானது தான் என்று அவர் சொல்லிப் பார்த்தார். இயக்குனர் கேட்கவில்லை. இதனை கவிக்கோவிடம் கவிஞர் வாலி சொன்னபோது அவர் சிரித்துக்கொண்டே சொன்னது:
‘கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியதுதானே…..?’
சீதையின் அழகை கம்பன் படலம் படலமாக வடித்துச் சொன்னான். கவிக்கோ அதனை இரண்டே வரிகளில் எடுத்துச் சொன்னார். ராவணன் சொல்கிறானாம்:
“இருகண் படைத்தவனே இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான் என்ன செய்வேன்?”
அற்புதம். பக்கவாட்டுச் சிந்தனை என்பது இதுதானோ..?
ஆண்டுகள் பல சென்றாலும் மீண்டும் மீண்டும் இவனைப்பாட எனக்கு ஆசை..!
*************************
முத்தமிழ் நாயகனே.! உன்மீது மோகம் கொண்டவர்கள் முத்தமிட நினைப்பது உன் ஆறாவது விரலைத்தான்.
உன் “பம்பர ஞானம்” இந்த பாமரனையும் சித்தி பெற வைத்தது.
குத்துமதிப்பாய் யாரோ சொன்னார்கள் உனக்கு சினிமா பிடிக்காது என்று. நீ குத்துப்பாட்டை குத்திக் காட்டியது நினைவில் நிழலாடுகிறது.
“பத்துப்பாட்டு என்றால் பதறுகிறோம்; திரைப்படத்தில்.. குத்துப்பாட்டு என்றால் குதூகலமாய் ஆடுகிறோம்” என்றாயே….?
தமிழனைப் பார்த்து நீ வேதனைப்பட்டது நினைவிருக்கிறது.
“உன் சிலம்பம் அதிகாரம் செய்தது அன்று – இன்றோ
அதிகாரக் கால்களில் சிலம்பாகி கிடக்கிறான் தமிழன்” என்றாய்….!
இன்றைய நாட்டின் நிலைமையை அன்றே நாசுக்காய் கணித்துச் சொன்ன நாஸ்ட்ரடாம்ஸ் நீ…!
“கங்கைகொண்டவன்தான் இன்று காவிரியையும் இழந்துவிட்டு கையைப் பிசைந்து நிற்கிறான்” என்றாய் ..!
பாவம் என்ன செய்தான் அவன்? பாரதியையும் கலாய்த்த பாவலன் நீ…!
“தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வோம் என்ற பாரதியே!
வந்து பார் இப்போது தமிழ் தெருவில்தான் நிற்கிறது” என்றாய்.
“உம்”மென்று சும்மா இருக்கவில்லை நீ. அரசியலையும் “சுப்புடு”வாய் அழகுறவே விமர்சனம் செய்தாய்.
“இந்த நாட்டில் நடிப்பவர்கள்தான் தலைவர்களாகிறார்கள் – அல்லது
தலைவர்களாக இருப்பவர்கள் நடிக்கிறார்கள்”
கூத்தாடிகளின் உண்மைத்தோண்டியை ஆண்டியாய் மாறி கூத்தாடாமலேயே போட்டுடைத்தாய்.
நீ அம்புலிமாமாவாய் மாறி குழந்தைகளுக்கு அளித்த அறிவுரையை யாரால் மறக்க இயலும்…?
“புத்தகங்களே..! குழந்தைளை கிழித்து விடாதீர்கள்…!”
ஆகா..! தத்துவ சிந்தனையில் சாக்ரடீஸ் நீ…!
“வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்று கேள்வி கேட்டு எங்களை திணறடித்தாய்.
ஞானப்பழம் பெற்றிட மயிலேறி உலகமெலாம் சுற்றி வந்தானாம் முருகன். இருக்குமிடத்திலேயே இருந்துக்கொண்டு அம்மை அப்பனை சுற்றிவந்து வெற்றி கண்டானாம் விநாயகன்.
தலையணை சைஸ் சிலப்பதிகாரக் கதையை “தம்மாந்துண்டு” வரிகளில் சரியாக புரியவைத்த மரியாதைக்குரியவன் நீ…!
“பால் நகையாள்; வெண்முத்துப் பல் நகையாள்; கண்ணகியாள்; கால் நகையால்;
வாய் நகைபோய்; கழுத்து நகை இழந்த கதை” என்று சுருக்கெழுத்தில் புரிய வைத்த பிட்மேன் நீ…!
இயக்கங்களால் பிரிந்து கிடக்கும் இஸ்லாமியச் சமுதாயத்திற்கும் “செக்” வைத்த விஸ்வநாதன் ஆனந்த் நீ…!
“உன் பகைவர்கள் உன் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள் -நீயோ…அத்தஹிய்யாத்தில் விரலை ஆட்டுவதா நீட்டுவதா என்று சர்ச்சையிட்டுச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாய்” என்று சரியாகச் சொன்னாய்..!
அது மட்டுமா? “சமூகத்தில் தொழுவதே கொஞ்சம் பேர்கள் தாம் அவர்களையும் நீ
குழப்பிக் கொண்டிருக்கிறாய்” என்று சமுதாயக் குழப்பிகளுக்கு சவுக்கடி தந்தாய்…!
வார்த்தைகளை மடக்கி எழுதினாலே கவிதை என்கிறார்கள். நீயோ.. வாசகன் மனதை சொடுக்கி எழுதத் தெரிந்த வசீகரன்.
நீ கோபித்துக் கொண்டாலும் சரி. நான் ஒன்றை இங்குச் சொல்லியே தீர வேண்டும். வக்பு வாரியத் தலைவராய் நீ பதவி வகித்த காலம், தமிழிலக்கியத்தின் வறுமைக் காலம். நீ உன் மவுன முகாரியைத் துறந்தபோதுதான், மூத்த மொழிக்கு மோகனம் பிறந்தது.
அம்மிக் கொத்த மறுத்த சிற்பியே..! ஆண்டுகள் நூறு நீ வாழ வேண்டும்! அழகான சிற்பங்கள் படைக்க வேண்டும்! அமுதத் தமிழ் அருந்தி நாங்கள் அகமகிழ வேண்டும்.
நீ பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. என்றபோதிலும்; தமிழுலகம் நீ பிறந்த நாளை மறக்கத் தயாரில்லை.
#அப்துல் கையூம்