Archive for the ‘நேர்காணல்’ Category

நேர்காணல்

kavikko2

அப்துல் ரகுமானிடம் நேர்காணல்…
– முனைவர் கருணாநிதி.

கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ்க் கவிதையுலகில் தனி முத்திரை பதித்தவர். புரட்சிக்கவிஞரைப் போல புதிய கவிஞர்களை வளர்த்தெடுப்பதில் ஆர்வமுடையவர். பல கவிதை நூல்களையும், கவிதை பற்றிய நூல்களையும் எழுதியவர். இவரின் கவிதைகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற திரு கருணாநிதி அவர்கள் கவிஞரோடு நடத்திய கலந்துரையாடலில் சில வார்ப்பு வாசகர்களுக்காக…
 
 1. நீங்கள் எந்த இயக்கத்தையும் சாராமல் இருக்கக் காரணம் என்ன ?

சுதந்திரமாகச் சிறகை விரிப்பவன் கவிஞன். அவனுக்கு இயக்கச் சார்பு என்பது  கூண்டுதான்.

2. உங்கள் கவிதைகளின் உள்ளடக்கங்களில் சமுதாயக் கவிதைகளுக்கு அடுத்த நிலையில் தத்துவக் கவிதைகள் அதிகமாக உள்ளன. ஆயினும் உங்களைத் தத்துவ கவிஞராக யாரும் கூறவில்லையே?

விமர்சகர்களின் பக்குவமின்மை

3. நிறைவேறாத காதல் கவிதைகள் பலவற்றை நீங்கள் எழுதியமைக்கு காரணம்?

கவிஞர் காதல் கவிதைகளை பாடினால் தன் வாழ்க்கை அனுபவத்தை பாடுவதாக எடுத்துக் கொள்ளமுடியாது. நான் காதலின் பல விதமான மனோபாவங்களைப் பாடியுள்ளேன். குறிப்பாக நிறைவேறாத கவிதைகளின் பாதிப்பு எனலாம்.

4. நடிகர்கள் அரசியலுக்கு வருவதை உங்கள் கவிதைகள் எதிர்ப்பது ஏன்?

தமிழ்நாட்டின் அவலத்தைச் சுட்டிக்காட்டுவது ஒரு நோக்கம். அரசியல் தெரிந்த நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் தடையில்லை. திரைப்படங்களில் மக்களுக்கு நன்மை செய்வது போல் வருபவர்களைப் பிரவேசித்ததால் ஏற்பட்ட சீரழிவுகளை எல்லோரும் அறிவர்.

5. ஆயிரம் திருநாமம் பாடி உருவமற்ற ஒரே கடவுள் என்று குறிப்பதன் நோக்கம் என்ன?

இறைவனுக்கு உருவமில்லையே தவிர, பெயர்கள் எத்தனை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மதங்களெல்லாம் இணையக்கூடிய ஒரு கொள்கையில் இணைப்பதுதான் என் நோக்கம்.

6. சமூகச் சீர்கேடுகள் குறித்து நீங்கள் கருதுவது என்ன?

பொருள் வேட்கையின் காரணமாக, நவ நாகரிக வாழ்க்கை முறை காரணமாக, நேர்மை, உண்மை, சுய மரியாதை போன்ற விழுமியங்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது. இதனால் உலகளவில் ஒரு பண்பாட்டுச் சீரழிவு காணப்படுகிறது. கவிஞன் ஒரு பரிபூரணமான அழகிய உலகத்தைக் காணவிரும்புகிறான். அவன் கண் முன்னால் அநீதிகளும் அக்கிரமங்களும் நடக்கிறபோது அவன் அவைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.

7. முரண் கவிதைகள் பெரிதும் எழுதிய கவிஞராகக் கருதப்பெறும் நீங்கள் அங்கதக் கவிதைகளே அதிக எண்ணிக்கையில் எழுதியுள்ளீர்களே? குறிப்பாக, நளினமாக அங்கதம் செய்கிறீர்களே?

இயல்பாகவே அங்கத உணர்வு எனக்கு பிடிக்கும். கவிதையின் இயல்புகளில் அங்கதமும் ஒன்று. நளினமாகத் தாக்குவதுதான் நாகராகம். தாக்கபடுபவனும் சிந்திக்க வேண்டும் என்பது கருத்து. அவனை எதிரியாக்கிக் கொள்ளக்கூடாது. சமூக குறைபாடுகளைக் சுட்டும்போது அங்கதத்தின் வழியாகச் சுட்டுவது ஒரு வழி.
 
 8. குறியீட்டுக் கவிதை எழுதுவது கடினம். குறிப்பாக, சொந்தக் குறியீட்டுக் கவிதைகள் எழுதுவது அதனினும் கடினம். உங்கள் கவிதைகளில் சொந்தக் குறியீடுகள் மிகுந்துள்ளதே?

இருப்பதைப் பயன்படுத்துவதைவிடச் சுயமாகப் படைப்பதற்கு எப்போதும் மதிப்பு உண்டு.
  
 9. படிமக் கவிதைகளைவிட,  குறீயிட்டுக் கவிதைகள் மிகுந்து உள்ளனவே?

குறியீடு பன்முகப்பொருள் தரும் ஆற்றல் வாய்ந்தது. குறியீடு, நான் கூற வரும் கருத்துக்கு உதவுகிறது. அதனால்தான் மிகுந்துள்ளன.

10. கலைகளை வரவேற்கும் நீங்கள் தமிழ்த் திரைப்படங்களை விரும்பாமல் எதிர்ப்பது ஏன்?

கலை இலக்கியம் என்றுதான் சொல்லுவார்கள். கவிஞனுக்கு இயல்பாகவே இயல், இசை, ஓவியம் போன்றவற்றில் பயிற்சி அல்லது ஈடுபாடு இருக்கும். ஒன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. கவிதையில் சொல்லோவியம் என்பதில் ஓவியம் உள்ளது. யாப்பில் இசை உள்ளது. எனக்குச் சிறுவயதிலிருந்து ஓவியம் வரைவதில் ஈடுபாடு இருந்து வந்துள்ளது. தமிழ்த் திரைப்படங்களை நான் விரும்பாமைக்குப் பல காரணங்கள் உள்ளன. தமிழ்த் திரைப்படங்கள் கர்நாடக இசை உடையது. என் உணர்வுகளுக்கு ஹிந்துஸ்தானிய இசைதான் ஒத்துப்போகிறது.
 
  11. ஒரு சில குறியீடுகளை அடிக்கடிப் பயன்படுத்துகின்றீர்கள் (எடுத்துக்காட்டாக) விசுவரூபம் எடுத்தல், பாற்கடல் கடைதல், சிலுவையில் அறைதல், உயிர்த்தெழுதல் முதலியவற்றைச் சான்றாகக் கூறலாம். இது பற்றி?

நான் சொல்ல வரும் பொருளுக்கு இந்தக் குறியீடுகள் அதகம் பயன்படுகின்றன். இது உளவியல் பாதிப்பும்தான். தனி மனித உணர்வுக்கு ஒத்துப்போதல், பாடுபொருளுக்குப் பொருத்தமான தன்மை, கூட்டுநனவிலி மனதின் பாதிப்பு என்பன இவற்றிற்குக் காரணங்கள் எனலாம். அக்குறியீடுகளைச் சொன்னால்தான் சரியான பொருத்தமாக இருக்கும் என்பதாலும், இக்குறியீடுகள் ஆழ்ந்த பல பொருள்களைத் தருவதாலும் இவைகளைப் பெரிதும் விரும்புகிறேன்.

12. உங்கள் கவிதைகளில் புதுமைத்தன்மை வரவேற்பையும், புரியாத்தன்மை எதிர்ப்பையும் பெறுகின்றனவே. இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

வாசகர்களுக்குப் பாடுபொருளில் ஆழம் தெரியாமைதான் முதற்காரணம். இருண்மை என்று குற்றம் சாட்டுவது கேலிக்குரியது. ஒரு நாளில் இரவு, பகல் இரண்டும் இருக்கிறது. மேலும் கவிதை என்பது அனுபவிப்பதற்காக எழுதப்படுவது. புரிந்து கொள்வதற்காக எழுதப்படுவது அல்ல. நான் செய்த புதுமைகளில் ஹைகூ கவிதைகள், இருசீர் வடிவக் கவிதைகள், ‘கீத்’ இசைப்பாடல்கள், வடிவாக்கக் கவிதைகள்/ பிற இலக்கிய வடிவக் கவிதைகள் என்பன குறிப்பிடத்தகுந்த வடிவப் பரிசோதனைகள் எனலாம்.

13. யாப்பின் ஓசை உங்கள் கவிதைகளில் பெரும்பாலும் ஆட்சி செய்கிறதே?

பல ஆண்டுகளாய் நான் யாப்பு பயின்றவன். யாப்பின் உள்ளார்ந்த சக்தியைத்தெரிந்துகொண்டதால் இன்றளவும் நிலைத்துள்ளேன். நான் புதுமை என்ற பெயரில் பழமையின் மூடத்தனத்தைத் னக்கி எறிய விரும்பாதவன்.

14. மாநிலங்களின் தனித்தன்மைகளை விரும்பியும், இந்தியன் இந்தியா என்பதை எதிர்த்தும் சில கவிதைகள் எழுதியுள்ளீர்கள் (தேசிய நீரோட்டம்) இது குறித்து?

ஒரு மனிதன் எனில் மொழியாலும் இனம் சார்ந்த பண்பாட்டாலும் அடையாளப்படுகிறான். இவற்றைப் பாதுகாக்கும் கொள்கையை ஆதரித்து எழுதுவது கவிஞர்களின் கடமை. என் கடமையும் அதுதான்.

தட்டச்சு: முத்துகுமரன்

நன்றி : வார்ப்பு இதழ்