Archive for the ‘மாண்புமிகு மனிதர்’ Category

கவிக்கோ அப்துல் ரகுமான் [மாண்புமிகு மனிதர்கள்)

_ பெ. கருணாகரன்

மதுரை மண் வீரம் செறிந்தது; அங்குப் பிறந்த சிறுவன் அப்துல்ரகுமானின் மனமோ காதல் கொண்டுஅலைந்தது. அது, தமிழ்க் காதல்! ஆனால், இவரது தாய்மொழியோ உருது.

அப்துல்ரகுமானின் பரம்பரையே கவிதைப் பரம்பரை. இவரது தந்தை சையத் அஹமத். உருதுவில் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். தாய் ஜைனப்பேகம். தாத்தா சையத் அஷ்ரஃப் உருது மற்றும் பாரசீக மொழிகளிலும் கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர். அந்தக் கவிதை ரத்தம் இவருக்குள்ளும் ஓடியது.

மதுரை _ கீழச்சந்தைப் பேட்டையில் வைகைக் கரையை ஒட்டி வீடு. வற்றிப் போனாலும் வற்றாத ஜீவ கற்பனைகளை இவருக்குள் விதைத்தது. வைகை நதிக்கரையில் நாகரிகம் வளரும்; கவிதை? வளர்ந்தது இவரது மனதில்.

அப்துல் ரகுமானின் வீட்டுக்கு அருகில் ஒரு சேரி உண்டு. குறவன் குறத்தி நடனம் ஆடும் குழு ஒன்று அங்கிருந்தது. அவர்களது நிகழ்ச்சி எங்கே நடந்தாலும் போய்விடுவார். நடனத்தைவிட அவர்கள் பாடும் பாடல்களின் மீதுதான் இவரது கவனம். காரணம், அந்தப் பாடல்கள் காவடிச் சிந்து வடிவத்தில் அமைந்தவை. அந்தச் சந்தம், இவர் மனதை மயக்கியது. இலக்கணம் தெரியாத சிறுவயதிலேயே, அதுபோல் எழுத முயன்றார். வெற்றியும் பெற்றார்.

மரபுக் கவிதையில் மகுடம்!

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும், கல்லூரி செல்ல இவருக்கு விருப்பமில்லை. தனது சித்தப்பா கடையில் அமர்ந்து வணிகம் செய்து கொண்டிருந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் தமிழை மட்டுமே சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்பதையறிந்த அப்துல்ரகுமானுக்குப் பலத்த மகிழ்ச்சி. தமிழ்ப் படிப்பதற்காகவே கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் பயின்ற தமிழ் இலக்கியங்களும், இலக்கணங்களும் அவரது தமிழ்ப் பசியைப் போக்கவில்லை; அதிகரிக்கச் செய்தன.

இங்கு இவர் கற்ற யாப்பருங்கலக் காரிகை, மரபுக் கவிதையில் இவர் மகுடம் சூட்டக் காரணமானது. யாப்பிலக்கணத்தைக் கற்பித்தவர், தமிழறிஞர் அ.கி.பரந்தாமனார்.

தமிழில் கம்பனும் கம்பதாசனும் சுரதாவும் இவர் மனம் கவர்ந்த கவிஞர்கள். கம்பனின் கவிதைச் சந்தம். இவர் மனதுடன் சொந்தம் கொண்டாடின. கவிதையின் உட்பொருள் மனதைக் கிறங்கடித்தன. இலக்கணமும் கற்பனையும் சம விகிதத்தில் கலந்திருந்த அந்தக் கவிதைகள் போல், தானும் எழுத ஆரம்பித்தார்.

இடைநிலைப் படிப்பு முடித்து இளங்கலை வகுப்பு. தமிழையே சிறப்புப் பாடமாக எடுத்தார். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழிலக்கியம் தவிர, ஆங்கில இலக்கியத்தின் மீதும் காதல் வந்தது. ஷெல்லி, கீட்ஸ் போன்ற கவிஞர்களின் கவிதைகள் மனசுக்குப் புதிய ருசியையும் உணர்வையும் ஊட்டின. கற்பனைகளில் புதிய ரசாயன மாற்றமும், அயல் மகரந்தச் சேர்க்கையும் நடந்தது.

கல்லூரியில் நடந்த கவிதைப் போட்டிகளில் எப்போதும் இவருக்குதான் முதல் பரிசு. தீவிர மரபுக் கவிஞராக இருந்த அப்துல்ரகுமான், முதுகலை படிக்கும்போது, வசனக் கவிதையின் கவர்ச்சிக்கு ஆளானார். அப்போது, இவர் படித்த நூல்களே இதற்குக் காரணம். பாரசீகக் கவிஞர் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்)யின் கவிதைகளும் இக்பாலின் கவிதைகளும் தாகூர், கலீல் ஜிப்ரான் கவிதைகளும் அவரைப் புது உலகுக்கு அழைத்துச் சென்றன. வசன வடிவில் ஒப்பனைகளற்று இருந்த அவற்றைப் போல அவரும் எழுத ஆரம்பித்தார்.

இந்தச் சூழலில், சர்ரியலிசம் இவரது மனதுக்குள் குடி கொண்டது. சர்ரியலிச அடிப்படையில் சோதனை முயற்சியாகப் பல கவிதைகள் புனைந்தார். இவரது முதல் கவிதைத் தொகுதியான ‘பால்வீதி’யில் இடம் பெற்றிருக்கும் பல கவிதைகள் சர்ரியலி விதையில் எழுந்த மலர்கள். எல்லாமே தமிழுக்குப் புதியவை.

பாசறை!

அந்தக் காலத்தில் மதுரை தியாகராசர் கல்லூரி அரசியல், இலக்கியப் பாசறையாகத் திகழ்ந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மிக முக்கியமானவர்களை உற்பத்தி செய்த இடமும் இந்தக் கல்லூரிதான்.

விருதுநகர் பெ.சீனிவாசன்,
கா.காளிமுத்து,
பழ. நெடுமாறன்,
நா.காமராசன்,
இன்குலாப்,
மீரா,
சாலமன் பாப்பையா,
ஏ.எஸ்.பிரகாசம் போன்றவர்கள் இவரது கல்லூரி நண்பர்கள்.

முதுகலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைத்தது. இவரது, வகுப்பு என்றால், மாணவர்கள் தவமிருப்பார்கள். சுவையான விஷயங்களைப் புதுப்புது விதமாகக் கூறுவார். ஒரு மணி நேர வகுப்புக்காக நான்கு மணி நேரத்தைக் கூட தயாரிப்புக்காகக் செலவிடுவார். அவரது உழைப்புக்குப் பலனிருந்தது. கல்லூரியில் சேர்ந்த மூன்று மாதத்துக்குள்ளேயே’ இவர் புகழ் கல்லூரியிலும் வெளியிலும் பரவலானது.

மற்ற வகுப்புகளில் அட்டகாசம் செய்யும் மாணவர்கள், இவர் வகுப்பில் மகுடி நாகமாய் மயங்கிக் கிடந்தார்கள். மற்ற வகுப்பு மாணவர்களும் இவர் பாடம் நடத்தும்போது, வந்து அமர ஆரம்பித்தனர். பிறகு, பேராசிரியர்களே கூட வரத் தொடங்கினார்கள்.

கலைஞரும் கவிஞரும்

கலைஞர் மீது இவருக்குத் தனிப்பட்ட அன்பும் மரியாதையும் உண்டு. மதுரை எழுத்தாளர் மன்றம் 11.6.1967_ல் ஒரு கவியரங்கம் நடத்தியது. வகுத்தல் என்ற தலைப்பில் அப்துல்ரகுமான் அதில் கவிதை பாடினார். விழாவுக்குச் சிறப்புரையாற்ற வந்த கலைஞர், அப்துல்ரகுமானை அருகில் அழைத்துக் கவிதையைப் பாராட்டினார். இது நடந்து சில மாதங்கள் கழித்து சென்னையில் நடந்த அண்ணா கவியரங்கில் அப்துல்ரகுமானும் கலந்துகொள்ள வேண்டுமென்று கலைஞர் அழைப்பு விடுத்தார்.

அந்தக் கவியரங்கில் அப்துல்ரகுமானின் கவிதைக்கு நல்ல வரவேற்பு. அதன்பிறகு நடந்த ஒவ்வொரு அண்ணா கவியரங்கமும் அப்துல்ரகுமான் இல்லாமல் நடந்ததில்லை. தன் தலைமையில் நடக்கும் கவியரங்கம் எதிலும் அப்துல்ரகுமானை தவிர்க்க மாட்டார் கலைஞர். அவரே ஒரு மேடையில் ‘அப்துல்ரகுமான் என் சபையின் ஆஸ்தானக் கவிஞர்’ என்று குறிப்பிட்டார்.

இவர் அரசியலுக்கு வர வேண்டு மென்பது கலைஞரின் விருப்பம். வாணியம்பாடி தொகுதியில் நிற்கச் சொல்லி வலியுறுத்தியதுண்டு. ‘எனக்கு அரசியல் வேண்டாம். உங்கள் அன்பு மட்டும் போதும்’ என்று ஒதுங்கிக் கொண்டார்.

பாடலாசிரியர்

திரைப்படப் பாடல் எழுத வைக்கப் பலரும் முயன்றனர். ஆனால், இவர் நழுவிக்கொண்டே வந்தார். காரணம், அங்குச் சுதந்திரமாக எழுத முடியாதென்பதுதான். பட்டிமன்றப் பேச்சாளர் சத்தியசீலன் இயக்குவதாக இருந்த ஒரு படத்தில், இவரைப் பாட்டெழுதச் சொன்னார். முழுக் கதையையும் கூறி, ‘எங்கள் தலையீடு இருக்காது. உங்கள் விருப்பம் போல் சுதந்திரமாக எழுதிக் கொடுங்கள். நாங்கள் மெட்டுப் போட்டுக் கொள்கிறோம்’ என்றார்.

இவர் இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். ஒரு பாடலின் பல்லவி: ‘என்னடி கோபமா? _ உன் பக்தனுக்கு நீ தருவதென்ன சாபமா?’_ பாடலைக் கேட்ட சவுண்ட் இன்ஜினீயர், ‘முதல் பாடல் ரெக்கார்டிங்கிலேயே சாபம்னு வருதே’ என்று இழுத்தார். ‘அப்படின்னா இதை ரெண்டாவது பாடலா பதிவு செய்யுங்கள்’ என்றார் கவிஞர் அமைதியாக.

இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா, ‘கண்ணியமான வித்தியாசமான பாடல்’ என்று பாராட்டினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது.

‘சினிமா பல மூட நம்பிக்கைகள் கொண்ட உலகம். அங்கு பெரிய படிப்பு தேவையில்லை. உயர்ந்த விஷயங்களை எழுத முடியாது. எழுதினாலும் யாராவது அதை மாற்றச் சொல்வார்கள். அங்கு எனக்குச் சரிப்பட்டு வராது’ என்கிறார் அப்துல்ரகுமான்.

உலக இலக்கியம்!

வாணியம்பாடியில் முப்பது வருடங்கள் பேராசிரியராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணிபுரிந்து ஐந்து ஆண்டுகள் சர்வீஸ் இருக்கும் போதே, 1991_ல் விருப்ப ஓய்வு வாங்கிவிட்டார். கல்லூரிப் பணி, படைப்புப் பணிக்கு இடையூறாக இருந்ததே காரணம். இவரது கம்பீரத் தேன் தமிழுக்காக சாகித்ய அகாதெமி உட்பட ஏராளமான விருதுகளும், பரிசுகளும் தேடிவந்தன.

ஹோமரின் ‘இலியத்’,
தாந்தேவின் ‘டிவைன் காமெடி’,
கதேவின் ‘ஃபாஸ்ட்’,
ஷேக்ஸ்பியர் எழுதிய பல நல்ல நாடகங்கள் போன்று உலகளவில் பேசும் விதமாகத் தமிழில் எந்தப் படைப்பும் இல்லையே என்ற ஆறாத வருத்தம் இவருக்குண்டு.
‘தமிழ்ப்படைப்புகளை உலகம் போற்றும்படிச் செய்ய வேண்டும். அந்த வகையில், பெருங்காப்பியம் ஒன்றைப் படைக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். உலகம் வியக்கும் உலகளாவிய ஒரு மனித நேயப் படைப்பாக அது இருக்கும். அதற்கான நேரத்தைத்தான் என்னால் ஒதுக்கிக்கொள்ள முடியவில்லை’ என்கிறார் அப்துல் ரகுமான்.

_ பெ. கருணாகரன்
செப்டம்பர் 29, 2006