ஆரூர் தமிழ்நாடன் கவிதை

arr-1

கடந்த ஆண்டு, கவிக்கோ அவர்கள் பிறந்நாளுக்காக கவிஞர் ஜலாலுதீன் தொகுத்த மலரில் இடம் பெற்ற என் கவிதை – ஆரூர் தமிழ்நாடன்

.ரகுமான் ; மாரீச மான்!
—————————–

ரகுமான்
ரகசியங்களின் காதலர்
அதனால்தான்
பிரபஞ்சத்தின் முணுமுணுப்பையும்
மோனக் கவிதைகளாய்
மொழிபெயர்க்கிறார்.

#

இவர்
ஆழ ஆழங்களில்
பயணிக்கும்
ஆபூர்வ யாத்ரீகர்;
எனவேதான்
இவரது
சொற்கள் எல்லாம்
சுரங்கங்களை அடைகாக்கின்றன.

#

இவரது கவிதைகள்
தர்க்கம் செய்யும்;
தர்க்கம் என்ற பெயரில்
சொர்க்கம் செய்யும்.

#

ரகுமானை நினைத்தாலே
புத்தி தள்ளாடும்;
காரணம் இவர்
நமது
வெற்றுக் கணங்களையும்
கோப்பைகளாக்கி
மதுவால் நிரப்புகிறவர்.

#

இவர்
மரபு வனத்தில் விளைந்த
புதுக்கவிதைப் புல்லாங்குழல்;
எனவே
இவரின் ஆலாபனைகளிடம்
அடிபணிகின்றன
ராகங்கள்.

#

ரகுமானின்
கவிதைகேட்டால்
சித்திரை
மனங்குளிர்ந்து மனங்குளிர்ந்து
மார்கழியாய் மாறிவிடும்
அதுபோலவே
இவர் இரவைப் பாடினால்
அது
பரவசத்தில் பகலாகிவிடும்.

#

இவர் புத்தகங்கள்
ஒவ்வொன்றும்
தீபங்களால் ஆன
திருக்கோயில்;
அதில் விழிபடும் போதெல்லாம்
அது
வழிபடும்.

#

இவர்
கவிதை மீதான காதலால்
துறவிகளும்
துறவைத் துறப்பார்;
தன்னை மறந்து
புலம்பிச் சிரிப்பார்

#

எனவே ரகுமானை
எச்சரிக்கையாக அணுகவேண்டும்
இல்லையெனில்
ஆச்சரியக் கவிதைகளால் அடிமையாக்கிவிடுவார்.

என்ன சொல்லி என்ன?
என் புத்தி
புத்தி கெட்டுபோய்
இவர் பின்னாலேயே
எப்போதும் அலைகிறது.

ரகுமான்
லட்சுமணக் கோடுகளைத்
தாண்டவைக்கும்
மாரீசமான்!

— ஆரூர் தமிழ்நாடன்

%e0%ae%86%e0%ae%b0%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d

கஸ்தூரியைத் தேடி அலையும் மான்

கவிக்கோ 1

கவிக்கோ 2

கவிக்கோ 3

கவிஞர் மீராவுடன் ஒரு நேர்காணல் – அப்துல் ரகுமான்

 

”அப்துல் ரகுமான் என் வலது கண். சிற்பி என் இடது கண். இன்குலாப் என் இடதுகை. காமராசன் என் வலதுகை. பாலாவும், மேத்தாவும் என் இதயத்தின் இரு பக்கம். வைரமுத்து, தமிழன்பன், சிதம்பரநாதன், முருகுசுந்தரம், அபி, தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச்செல்வன், இந்திரன், காசி ஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ. சேஷாசலம், க.வை. பழனிச்சாமி, நாஞ்சில் ஆரிது. வைகை வாணன், அப்துல்காதர், இக்பால், பஞ்சு, ரவி சுப்ரமணியன், வசந்தகுமார் – இவர்கள் எல்லாம் என் அங்கங்களைப் போல என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே நான் நான் அல்ல. நான் எல்லோரும் கலந்த அவதாரம். ஆமாம். நான் செத்தாலும் வாழ்வேன்.” என்று தனது புத்தகத்துக்கு முன்னுரையில் எழுதிய கவிஞர் மீரா இன்று இல்லை.

ஆனால் அவரது சிந்தனைகளும், செயல்களும் இன்னுமிருக்கிறது. என்றென்றும் இருக்கும்.”

அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது நேர்காணலை இக்கட்டுரை மூலம் தருகிறோம்.

மீரா காற்று. ஓரிடத்தில் நிற்க மாட்டார். அவரை என் வீட்டில் மூன்று மணி நேரம் அடைத்து வைத்து உரையாடினேன். அதிலிருந்து சில பகுதிகள்.

எப்போது கவிதை எழுத தொடங்கினீர்கள்? அதற்கான தூண்டுதலாக இருந்தது எது? அல்லது யார்?

பள்ளிக்கூட நாட்களிலிருந்தே எனக்கு திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு இருந்தது. அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன், மு.வ ஆகியோரின் எழுத்துக்கள் என்னை எழுதத் தூண்டின. கல்லூரி நாட்களில் சுரதா, தாகூர், கலீல் ஜிப்ரானில் ஈடுபாடு ஏற்பட்டது. என் முதல் கவிதை ”தீபன் குன்றம்” பாரதி பற்றியது. அது 1959இல் ”தாமரை”யில் வெளிவந்தது. அது மரபுக் கவிதை. எண்சீர் விருத்தம். பாரதிதாசன் பாதிப்பு அதில் தெரியும்.

அறிஞர் அண்ணா உங்கள் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை அறிவேன். அவரோடு எப்படி அறிமுகம் ஆனீர்கள்?

”திராவிட நாடு”, ”திராவிடன்”, ”முரசொலி”, ”தென்றல்”, ”இன முழக்கம்”, ”மன்றம்” இதழ்களில் என் கவிதைகள் வெளிவந்து கொண்டிருந்தன. எல்லாம் அரசியல் கவிதைகள். வேழவேந்தன் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் பேசும்போது – 1964 என்று நினைக்கிறேன். திராவிட இயக்கக் கவிஞர்கள் என்று சிலர் பெயர்களைப் பட்டியலிட்டார். அதில் ”மீ. இராசேந்திரன் என்ற ஒருவர்” என்று என் பெயரைக் குறிப்பிட்டார். ”தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்” என்ற என் வரியை இருமுறை மேற்கோள் காட்டி எழுதி இருக்கிறார். ”பொங்கல் கொண்டாட வேண்டும்” என்று கூறும் என்னுடைய மற்றொரு கவிதையையும் குறிப்பிட்டிருக்கிறார். திருச்சியில் நடந்த தி.மு.க. மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்து எழுதிய கடிதத்தில் ”சாவா சந்திப்போம்: வாழ்க்கை நமக்கென்ன, பூவா புறப்படுவோம்: புல்லியரைத் தூள் செய்வோம்” என்ற என் கவிதை வரியை எடுத்துக் காட்டி எழுதியிருக்கிறார். ஒருமுறை நேரில் சந்திக்க முயன்றேன் முடியாமல் போய்விட்டது.

கலைஞரோடு எந்த அளவில் தொடர்பு?

”முரசொலி”யில் கவிதை எழுதியிருக்கிறேன். கலைஞர் தலைமையில் கவியரங்கத்தில் பாடியிருக்கிறேன். ஆசிரியர் போராட்டத்தின் போது அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். எனக்கு வேறு இடத்தில் வேலைக்காகத் துணைவேந்தராக இருந்த மு.வ.விடம் பரிந்துரைத்திருக்கிறார். 1983இல் மதுரை எட்வர்ட் ஹாலில் பாரதி நூற்றாண்டு விழாக் கவியரங்கம். அப்போது எனக்குப் பொதுவுடைமைப் கோட்பாட்டுச் சார்பு ஏற்பட்டிருந்தது. கலைஞர் பேச வந்திருந்தார். ”நீ லெனினைப் போல் புரட்சித் தலைவனாக வேண்டும்” என்று பாடினேன். கலைஞர் பேசும்போது ”தான் போனதுமல்லாமல் என்னையும் தூக்கிக் கொண்டு போகப் பார்க்கிறார். அவர் எங்கள் வண்டலில் விளைந்த பயிர் என்பதில் பெருமைப்படுகிறேன். அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்” என்று கூறினார்.

தி.மு.க.வில் இவ்வளவு தீவிரமாக இருந்த நீங்கள் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் எப்படிப் போனீர்கள்?

தி.மு.க. உணர்வோடு இருந்தபோதே பொதுவுடைமைக் கோட்பாட்டையும் நான் விரும்பினேன். ”ஜனசக்தி” படிப்பேன். பேராசிரியர் தர்மராஜன் தொடர்பால் நான் மார்க்சீயத்தின் பக்கம் போகத் தொடங்கினேன். மேலும் தி.மு.க திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது எனக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி எதிர்ப்புப் போன்றவற்றில் ஏற்படுத்திக் கொண்ட சமரசம் இவையெல்லாம் சேர்ந்து என்னைப் பொதுவுடைமைப் பக்கம் தள்ளிவிட்டன.

புதுக்கவிதை எழுதத் தொடங்கியது எப்போது? எதனால்?

கல்லூரி நாட்களிலேயே தாகூர் கவிதைகளை வி.ஆர்.எம். செட்டியார் மொழிபெயர்ப்பில் படித்தபோது வசன கவிதை என்னை ஈர்த்தது. டி.எஸ். எலியட் ”வேஸ்ட் லேண்”டும் படித்தேன். முற்றிலும் புரியவில்லை என்றாலும் இந்தப் புதுமைப் போக்குப் பிடித்திருந்தது. தாகூர் ”காதல் பரி”சின் பாதிப்பில் 1959இல் ”காதல் கனி” என்ற வசன கவிதை எழுதினேன். இதுவே என் முதல் வசன கவிதை முயற்சி. தொடக்கத்தில் புதுக்கவிதையை வெறுத்த பொதுவுடைமையர் தி.க.சி ”தாமரைப் பொறுப்பேற்று (1970) வசன கவிதையை ஆதரித்த பிறகு, அதன் பக்கம் திரும்பினர். கைலாசபதியும் புதுக்கவிதை பற்றிய தம் வெறுப்பை மாற்றிக் கொண்டிருந்தார். ”வானம்பாடி”யும் வந்தது. இந்தக் காலக் கட்டத்தில் தான் முதலில் ”கனவுகள் கற்பனைகள்ஸ்ரீகாகிதங்கள்” பிறகு ”ஊசிகள்” எழுதினேன்.

முற்போக்குத் திறனாய்வாளர்கள் பொதுவாகவே பெண்ணைப்பற்றி காதலைப் பற்றி எழுதினால் கடுமையாக விமர்சிப்பர் ‘க.க.கா. எழுதியபோது நீங்கள் இதைப் பற்றி நினைக்கவில்லையா?

நினைத்தேன். ஆனால் இடையிடையே, ”நிலத்தை மீட்கப்போனேன்.” நான் ஏங்கல்ஸ’ன் மாணவன்”, ”புரட்சியில் மலர்ந்த சோவியத் பூமியின் கூட்டுப் பண்ணைகளைப் படங்களில் பார்த்து மலைக்கும், ஓர் இந்திய உழவனைப் போல்…” என்ற வரிகளை இணைத்திருந்தேன். அதனால் முற்போக்கு வட்டத்தில் வரவேற்பே இருந்தது. தி.க.சி. பாராட்டிக் கடிதம் எழுதினார். ”தேசம் தழுவும் பொதுவுடைமைக்கு, வரவேற்புரை எழுதும்போதும், தேகம் தழுவும் எனக்கு – என் தனியுடைமைக்கு வாழ்த்துறை எழுதும் போதும்” என்ற வரியை மட்டும் ”இளவேனில்” கடுமையாக விமர்சனம் செய்து எழுதினார். பொதுவாகப் பொதுவுடைமைச் சார்புப் பத்திரிகைகள் பாராட்டி எழுதின.

நீங்கள் சிவப்பு வட்டத்துக்குள் இருக்கும் கவிஞர் என்பதால்தான் இந்தப் பாராட்டு. இந்த வட்டத்துக்கு வெளியே இருப்பவன் ”க.க.கா” போல ஒரு நூலை எழுதியிருந்தால் கிழித்திருப்பார்கள். சோவியத்தை நீங்கள் ஆழமாக நேசித்தீர்கள். அது சிதறி உடைந்துபோன போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

என் கனவுலகம் உடைந்ததுபோல் இருந்தது. தி.மு.க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட போது ஏற்பட்டதுபோல் மனத்தில் கலவரம் ஏற்பட்டது.

சோவியத் சிதைந்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

கார்ப்பச்சேவ் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுதான் காரணம். மேலும் மக்களுக்கும் மேற்கத்திய கன்ஸ்யூமரிஸத்தில் ஒரு மோகம் இருந்ததும் காரணம்.

இது மட்டும்தான் காரணமா? உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவனாயினும் ஆட்சி, அதிகாரம் என்று வந்துவிட்டால் அவனுக்கும் ஆளும் வர்க்கத்தின் குணங்கள் வந்துவிடும் என்பது என் கருத்து. அளவுக்கு மீறிய அதிகாரத்தைப் பயன்படுத்திச் சில அடிப்படை மனித உரிமைகளை ஒடுக்கினார்கள் உள்ளே குமறிக் கொண்டிருந்த எரிமலை வெடித்துவிட்டது. இல்லை?

அதுவும் உண்மைதான் சோவியத் காலப்போக்கில் ஒரு ”ப்யூரக்ரேட் ஸ்டேட் ஆக மாறிப்போய்விட்டது.

”க.க.கா” படிக்கும் போது அது கற்பனையாகத் தெரியவில்லை சுயஅனுபவத்தின் கனல் தெரிகிறது சரிதானா?

சரிதான். கல்லூரி மாணவனாக இருந்தபோது எனக்கு நேர்ந்தசொந்த அனுபவத்தில் மலர்ந்ததுதான் ”க.க.கா.” இருந்தாலும் அதை வெறும் மானுடக் காதலாகச்சொல்லாமல் ஓர் ஆன்மீகப் பரிமாணமும் தந்திருக்கிறேன். பெண்ணை வெறும் பெண்ணாக அல்லாமல ஓர் இலட்சிய சமூக அமைப்பின் – பரிபூரணத்தின் குறியீடாகவே கையாண்டிருக்கிறேன்.

பதிப்பாளர் மீராவால் படைப்பாளர் மீராவுக்குப் பாதிப்பு உண்டானதுப் பற்றி நினைத்து வருந்தியதுண்டா?

நான் பணியாற்றிய சிவகங்கை மன்னர் கல்லூரியில் பிரச்சினைகள் உண்டாகிப் போராட்டம் வெடித்தபோது இருமுறை நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டேன். இதனால் நிரந்தரமாக வேலை போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்துவிட்டது. அதனால் நான் விரும்பிய பதிப்புத்துறையைத் தேர்ந்தெடுத்தேன் அதற்கு நீங்களும் காரணம் ”அபி”யின் கவிதைகளை வெளியிட விரும்பி நாம் சில பதிப்பாளர்களை அணுகியபோது, ”கவிதையா? விற்காதே” என்று அவர்கள் புறக்கணித்ததைக் கண்டு கொதித்துப்போய், ”நாமே பதிப்பித்தால் என்ன?” என்று நீங்கள் கூறுனீர்கள். பதிப்பகத்திற்கு ”அன்னம்” என்ற பெயரும் நீங்கள்தான் சூட்டினீர்கள். நீங்களும், நானும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு ”அன்னம்” தொடங்கினோம். விளையாட்டாய்த் தொடங்கியது வினையாகிவிட்டது. நான் அதிலேயே மூழ்கிப்போனேன். அதனால் எழுதமுடியாமல் போய்விட்டது. அதனால் எனக்கு வருத்தம் தான். ”அன்னம்” பொருளாதார வகையில் தோல்விதான் என்றாலும் தரமான புத்தகங்களை அழகாக வெளியிட்டவர்கள் என்ற பாராட்டைப் பெற்றிருப்பது ஆறுதலாக இருக்கிறது.

”அன்ன”த்தின் சாதனையாக எதைக்கருதுகிறீர்கள்?

இரண்டு, ஒன்று புதுக்கவிதைக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. ”வானம்பாடி” பத்திரிக்கையாக இருந்து புதுக்கவிதைக்குப் பரவலான கவனத்தைப் பெற்றுத்தந்தது. ”அன்னம்”, பதிப்பகமாக இருந்து அதேப்பணியைச் செய்தது. ”கவிதை என்றால் விற்காது” என்ற கருத்தை உடைத்தது. இரண்டு, கரிசல் இலக்கியத்தைப் பிரபலப்படுத்தியது. கி.ரா. மட்டுமல்லாமல் இன்னும் 5, 6 பேர்களுடைய நூல்களை அன்னம் வெளியிட்டது.

”அன்னம் விடு தூது” ஒரு நல்ல பத்திரிக்கையாக வந்துக் கொண்டிருந்ததே.. ஏன் நிறுத்தினீர்கள்?

சிற்றிதழாக இல்லாமல் ”மிடில் மேகஸை”னாகக் கொண்டுவர வேண்டுமென்று நினைத்தேன். ஏஜென்டுகள் பணம் தராமல் ஏமாற்றிவிட்டார்கள். விளம்பரங்களும் பெற முடியவில்லை அதனால் கையைக் கடிக்க ஆரம்பித்தது. தாங்க முடியாது என்ற நிலை வந்தபோது வேறு வழியின்றி நிறுத்திவிட்டேன்.

கவிஞர், உறையாளர், கல்லூரி ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், ஆசிரியர் போராட்டத்தளபதி, பதிப்பாளர், அச்சக உரிமையாளர் என்று பல பணிகளில் முத்திரை பதித்திருக்கிறீர்கள் இன்னும் நிறைவேறாத ஆசை ஏதேனும் உண்டா? ஏதேனும் வருங்காலத் திட்டம்?

நிரந்தரமாக நிற்கும்படி ஒரு நல்ல இலக்கியம் படைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வசனகவிதையில் நாடகமாகவோ, காவியமாகவோ ஒரு நூல் எழுதும் எண்ணம் இருக்கிறது. அதிகமாக படைக்காமல் போனதை இதன் மூலம் ஈடு செய்ய விரும்புகிறேன்.

கவிக்கோ.
SUNDAY, MARCH 13, 2011

நன்றி : தொகுப்புகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் [மாண்புமிகு மனிதர்கள்)

_ பெ. கருணாகரன்

மதுரை மண் வீரம் செறிந்தது; அங்குப் பிறந்த சிறுவன் அப்துல்ரகுமானின் மனமோ காதல் கொண்டுஅலைந்தது. அது, தமிழ்க் காதல்! ஆனால், இவரது தாய்மொழியோ உருது.

அப்துல்ரகுமானின் பரம்பரையே கவிதைப் பரம்பரை. இவரது தந்தை சையத் அஹமத். உருதுவில் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். தாய் ஜைனப்பேகம். தாத்தா சையத் அஷ்ரஃப் உருது மற்றும் பாரசீக மொழிகளிலும் கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர். அந்தக் கவிதை ரத்தம் இவருக்குள்ளும் ஓடியது.

மதுரை _ கீழச்சந்தைப் பேட்டையில் வைகைக் கரையை ஒட்டி வீடு. வற்றிப் போனாலும் வற்றாத ஜீவ கற்பனைகளை இவருக்குள் விதைத்தது. வைகை நதிக்கரையில் நாகரிகம் வளரும்; கவிதை? வளர்ந்தது இவரது மனதில்.

அப்துல் ரகுமானின் வீட்டுக்கு அருகில் ஒரு சேரி உண்டு. குறவன் குறத்தி நடனம் ஆடும் குழு ஒன்று அங்கிருந்தது. அவர்களது நிகழ்ச்சி எங்கே நடந்தாலும் போய்விடுவார். நடனத்தைவிட அவர்கள் பாடும் பாடல்களின் மீதுதான் இவரது கவனம். காரணம், அந்தப் பாடல்கள் காவடிச் சிந்து வடிவத்தில் அமைந்தவை. அந்தச் சந்தம், இவர் மனதை மயக்கியது. இலக்கணம் தெரியாத சிறுவயதிலேயே, அதுபோல் எழுத முயன்றார். வெற்றியும் பெற்றார்.

மரபுக் கவிதையில் மகுடம்!

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும், கல்லூரி செல்ல இவருக்கு விருப்பமில்லை. தனது சித்தப்பா கடையில் அமர்ந்து வணிகம் செய்து கொண்டிருந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் தமிழை மட்டுமே சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்பதையறிந்த அப்துல்ரகுமானுக்குப் பலத்த மகிழ்ச்சி. தமிழ்ப் படிப்பதற்காகவே கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் பயின்ற தமிழ் இலக்கியங்களும், இலக்கணங்களும் அவரது தமிழ்ப் பசியைப் போக்கவில்லை; அதிகரிக்கச் செய்தன.

இங்கு இவர் கற்ற யாப்பருங்கலக் காரிகை, மரபுக் கவிதையில் இவர் மகுடம் சூட்டக் காரணமானது. யாப்பிலக்கணத்தைக் கற்பித்தவர், தமிழறிஞர் அ.கி.பரந்தாமனார்.

தமிழில் கம்பனும் கம்பதாசனும் சுரதாவும் இவர் மனம் கவர்ந்த கவிஞர்கள். கம்பனின் கவிதைச் சந்தம். இவர் மனதுடன் சொந்தம் கொண்டாடின. கவிதையின் உட்பொருள் மனதைக் கிறங்கடித்தன. இலக்கணமும் கற்பனையும் சம விகிதத்தில் கலந்திருந்த அந்தக் கவிதைகள் போல், தானும் எழுத ஆரம்பித்தார்.

இடைநிலைப் படிப்பு முடித்து இளங்கலை வகுப்பு. தமிழையே சிறப்புப் பாடமாக எடுத்தார். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழிலக்கியம் தவிர, ஆங்கில இலக்கியத்தின் மீதும் காதல் வந்தது. ஷெல்லி, கீட்ஸ் போன்ற கவிஞர்களின் கவிதைகள் மனசுக்குப் புதிய ருசியையும் உணர்வையும் ஊட்டின. கற்பனைகளில் புதிய ரசாயன மாற்றமும், அயல் மகரந்தச் சேர்க்கையும் நடந்தது.

கல்லூரியில் நடந்த கவிதைப் போட்டிகளில் எப்போதும் இவருக்குதான் முதல் பரிசு. தீவிர மரபுக் கவிஞராக இருந்த அப்துல்ரகுமான், முதுகலை படிக்கும்போது, வசனக் கவிதையின் கவர்ச்சிக்கு ஆளானார். அப்போது, இவர் படித்த நூல்களே இதற்குக் காரணம். பாரசீகக் கவிஞர் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்)யின் கவிதைகளும் இக்பாலின் கவிதைகளும் தாகூர், கலீல் ஜிப்ரான் கவிதைகளும் அவரைப் புது உலகுக்கு அழைத்துச் சென்றன. வசன வடிவில் ஒப்பனைகளற்று இருந்த அவற்றைப் போல அவரும் எழுத ஆரம்பித்தார்.

இந்தச் சூழலில், சர்ரியலிசம் இவரது மனதுக்குள் குடி கொண்டது. சர்ரியலிச அடிப்படையில் சோதனை முயற்சியாகப் பல கவிதைகள் புனைந்தார். இவரது முதல் கவிதைத் தொகுதியான ‘பால்வீதி’யில் இடம் பெற்றிருக்கும் பல கவிதைகள் சர்ரியலி விதையில் எழுந்த மலர்கள். எல்லாமே தமிழுக்குப் புதியவை.

பாசறை!

அந்தக் காலத்தில் மதுரை தியாகராசர் கல்லூரி அரசியல், இலக்கியப் பாசறையாகத் திகழ்ந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மிக முக்கியமானவர்களை உற்பத்தி செய்த இடமும் இந்தக் கல்லூரிதான்.

விருதுநகர் பெ.சீனிவாசன்,
கா.காளிமுத்து,
பழ. நெடுமாறன்,
நா.காமராசன்,
இன்குலாப்,
மீரா,
சாலமன் பாப்பையா,
ஏ.எஸ்.பிரகாசம் போன்றவர்கள் இவரது கல்லூரி நண்பர்கள்.

முதுகலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைத்தது. இவரது, வகுப்பு என்றால், மாணவர்கள் தவமிருப்பார்கள். சுவையான விஷயங்களைப் புதுப்புது விதமாகக் கூறுவார். ஒரு மணி நேர வகுப்புக்காக நான்கு மணி நேரத்தைக் கூட தயாரிப்புக்காகக் செலவிடுவார். அவரது உழைப்புக்குப் பலனிருந்தது. கல்லூரியில் சேர்ந்த மூன்று மாதத்துக்குள்ளேயே’ இவர் புகழ் கல்லூரியிலும் வெளியிலும் பரவலானது.

மற்ற வகுப்புகளில் அட்டகாசம் செய்யும் மாணவர்கள், இவர் வகுப்பில் மகுடி நாகமாய் மயங்கிக் கிடந்தார்கள். மற்ற வகுப்பு மாணவர்களும் இவர் பாடம் நடத்தும்போது, வந்து அமர ஆரம்பித்தனர். பிறகு, பேராசிரியர்களே கூட வரத் தொடங்கினார்கள்.

கலைஞரும் கவிஞரும்

கலைஞர் மீது இவருக்குத் தனிப்பட்ட அன்பும் மரியாதையும் உண்டு. மதுரை எழுத்தாளர் மன்றம் 11.6.1967_ல் ஒரு கவியரங்கம் நடத்தியது. வகுத்தல் என்ற தலைப்பில் அப்துல்ரகுமான் அதில் கவிதை பாடினார். விழாவுக்குச் சிறப்புரையாற்ற வந்த கலைஞர், அப்துல்ரகுமானை அருகில் அழைத்துக் கவிதையைப் பாராட்டினார். இது நடந்து சில மாதங்கள் கழித்து சென்னையில் நடந்த அண்ணா கவியரங்கில் அப்துல்ரகுமானும் கலந்துகொள்ள வேண்டுமென்று கலைஞர் அழைப்பு விடுத்தார்.

அந்தக் கவியரங்கில் அப்துல்ரகுமானின் கவிதைக்கு நல்ல வரவேற்பு. அதன்பிறகு நடந்த ஒவ்வொரு அண்ணா கவியரங்கமும் அப்துல்ரகுமான் இல்லாமல் நடந்ததில்லை. தன் தலைமையில் நடக்கும் கவியரங்கம் எதிலும் அப்துல்ரகுமானை தவிர்க்க மாட்டார் கலைஞர். அவரே ஒரு மேடையில் ‘அப்துல்ரகுமான் என் சபையின் ஆஸ்தானக் கவிஞர்’ என்று குறிப்பிட்டார்.

இவர் அரசியலுக்கு வர வேண்டு மென்பது கலைஞரின் விருப்பம். வாணியம்பாடி தொகுதியில் நிற்கச் சொல்லி வலியுறுத்தியதுண்டு. ‘எனக்கு அரசியல் வேண்டாம். உங்கள் அன்பு மட்டும் போதும்’ என்று ஒதுங்கிக் கொண்டார்.

பாடலாசிரியர்

திரைப்படப் பாடல் எழுத வைக்கப் பலரும் முயன்றனர். ஆனால், இவர் நழுவிக்கொண்டே வந்தார். காரணம், அங்குச் சுதந்திரமாக எழுத முடியாதென்பதுதான். பட்டிமன்றப் பேச்சாளர் சத்தியசீலன் இயக்குவதாக இருந்த ஒரு படத்தில், இவரைப் பாட்டெழுதச் சொன்னார். முழுக் கதையையும் கூறி, ‘எங்கள் தலையீடு இருக்காது. உங்கள் விருப்பம் போல் சுதந்திரமாக எழுதிக் கொடுங்கள். நாங்கள் மெட்டுப் போட்டுக் கொள்கிறோம்’ என்றார்.

இவர் இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். ஒரு பாடலின் பல்லவி: ‘என்னடி கோபமா? _ உன் பக்தனுக்கு நீ தருவதென்ன சாபமா?’_ பாடலைக் கேட்ட சவுண்ட் இன்ஜினீயர், ‘முதல் பாடல் ரெக்கார்டிங்கிலேயே சாபம்னு வருதே’ என்று இழுத்தார். ‘அப்படின்னா இதை ரெண்டாவது பாடலா பதிவு செய்யுங்கள்’ என்றார் கவிஞர் அமைதியாக.

இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா, ‘கண்ணியமான வித்தியாசமான பாடல்’ என்று பாராட்டினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது.

‘சினிமா பல மூட நம்பிக்கைகள் கொண்ட உலகம். அங்கு பெரிய படிப்பு தேவையில்லை. உயர்ந்த விஷயங்களை எழுத முடியாது. எழுதினாலும் யாராவது அதை மாற்றச் சொல்வார்கள். அங்கு எனக்குச் சரிப்பட்டு வராது’ என்கிறார் அப்துல்ரகுமான்.

உலக இலக்கியம்!

வாணியம்பாடியில் முப்பது வருடங்கள் பேராசிரியராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணிபுரிந்து ஐந்து ஆண்டுகள் சர்வீஸ் இருக்கும் போதே, 1991_ல் விருப்ப ஓய்வு வாங்கிவிட்டார். கல்லூரிப் பணி, படைப்புப் பணிக்கு இடையூறாக இருந்ததே காரணம். இவரது கம்பீரத் தேன் தமிழுக்காக சாகித்ய அகாதெமி உட்பட ஏராளமான விருதுகளும், பரிசுகளும் தேடிவந்தன.

ஹோமரின் ‘இலியத்’,
தாந்தேவின் ‘டிவைன் காமெடி’,
கதேவின் ‘ஃபாஸ்ட்’,
ஷேக்ஸ்பியர் எழுதிய பல நல்ல நாடகங்கள் போன்று உலகளவில் பேசும் விதமாகத் தமிழில் எந்தப் படைப்பும் இல்லையே என்ற ஆறாத வருத்தம் இவருக்குண்டு.
‘தமிழ்ப்படைப்புகளை உலகம் போற்றும்படிச் செய்ய வேண்டும். அந்த வகையில், பெருங்காப்பியம் ஒன்றைப் படைக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். உலகம் வியக்கும் உலகளாவிய ஒரு மனித நேயப் படைப்பாக அது இருக்கும். அதற்கான நேரத்தைத்தான் என்னால் ஒதுக்கிக்கொள்ள முடியவில்லை’ என்கிறார் அப்துல் ரகுமான்.

_ பெ. கருணாகரன்
செப்டம்பர் 29, 2006

கவியரங்கத்தில் கவிக்கோ

எனக்கொரு
சந்தேகம்

உன்னை
எங்கள் மூச்சு
என்றார்

அப்படியென்றால்
நாம் செத்துப்போனது
எப்படி?

உன்னை
வாங்கிய நாம்
பிறகு
விட்டு விட்டோமா?

மேல்வாய்
பிரசவித்த
மெல்லிய ஒலி
வளர்ந்து
பருவமுற்றபோது
பைந்தமிழே
நீ பிறந்தாய்

முப்பதே
ஒலிகளுக்குள்
முழு உலகம்
அளப்பவளே!
உன்னைப்போல்
எப்போதும்
உயிர் மெய்யோடு
இயங்குகின்ற மொழி எது?

குறிஞ்சியிலே
வாழைக்குமரியாய்
உதித்தவள்

முல்லையிலே
மலர்ந்து
முழுமலராய்
சிரித்தவள்

மருதத்தில்
போகத்தால்
மசக்கை
கொண்டவள்
நெய்தலிலே
காவியங்கள்
நெய்தவள்

ஈரமற்ற
பாறையிலும்
பூத்த மணிமலர்

பாடயிலே
தேவர்களின்
பாடைகள்
போனபின்னும்

உன் செய்
பாடயிலே
ஆடயிலே
படிப்படியாய்
வளர்ந்தவள்

வாயின்
சுவாசமே
வயிறார
தித்திக்கும்
கனிச்சுவையாய்

எங்கள்
காதருந்தும்
கள்ள

எம்மொழி
செம்மொழி
எனக்கேட்டால

தலைநிமிர்ந்து
எம்மொழி
செம்மொழி
எனச்சொல்லும்
புகழ் கொடுத்தாய

செத்த மொழிகள்
இங்கு
சிம்மாசனம் ஏற
உயிர் மெய்யோடு
இருந்த உயர்ந்த
மொழி
தமிழ்மொழிக்கோ
தாமதமாகவே
செம்மொழி
சிம்மாசனம் கிடைத்தது

இதற்கு
தமிழன்
தூங்கிக்
கிடந்ததுதான்
காரணம

தான்
ஆடாவிட்டாலும்
பரவாயில்லை
தமிழ்
ஆடவேண்டும்
என்று
நினைக்கும்
கலைஞர்
இல்லையென்றால்
இதுகூட
நடந்திருக்காத

தமிழே
நீ
தீயாலே
கொஞ்சம்
தீந்தாய்

கடல்
என்னும்
பேயாலே
பேரழிவை
பெற்றாய

கரையானின்
வாயாலே
கொஞ்சம்
கரைந்தாய்

வற்றவந்த
அயல்மொழியின்
நோயாலே
நலம்
கெட்டு
நொந்தாய்

இன்றோ
உன்
சேயாலே
சீரழிந்து
தேம்பி
அழுகின்றாய
தமிழே
உன்னிடத்தில்
உயிரெழுத்தை
கற்றோமே
உயிர் பெற்று எழுந்தோம்

மெய்யெழுத்தை
கற்றோமே
மெய்யெழுத கற்றோம்

நீ
ஆயுதமும்
உயிர் என்றாய்

அதை மறந்து
போனதனால்
பகைவர்களிடம்
தோற்றுவிட்டோம்

பத்துப்பாட்டு
என்றால்
பதறுகிறோம்
திரைப்படத்தில்
குத்துப்பாட்டு
என்றால்
குதூகலமாய்
ஆடுகிறோம்

எட்டுத்தொகை
பெற்று
இறுமாந்து
இருந்த
இனம்
சுற்றித்
தொகைக்கு
எல்லாம்
தொலைத்து
விட்டு
இருக்கின்றோம்

அன்றோ
குறல் என்ற
உன்
ஈரடியை
வணங்கியது
உலகம

இன்றோ
யார் என்ற
விவஸ்தை கூட
இல்லாமல்
இனப்பகைவர்
காலடியில்
விழுவதுதான்
தமிழரின்
கலாச்சாரம்

உன்
சிலம்பம்
அதிகாரம்
செய்தது
அன்று

இன்றோ
அதிகாரக் கால்களில்
சிலம்பாகி
கிடக்கிறான்
தமிழன

பரன்குணம்
படைத்த
பரம்பரை

இன்று உன்னை
பரணிலே
போட்டுவிட்டு
பாதையெல்லாம்
நடக்கிறது

பிள்ளைத்தமிழ்
பேச பேரின்பம்
கொண்டவளே!
இன்று
உன்
பிள்ளைகள்
பேசும் பேச்சிலே
நீ இல்லை

இமயத்தில்
கொடியேற்றி
இறுமாந்து
நின்றவன்

சமயக்கொடியேற்றி
சகதியிலே
விழுந்துவிட்டான்

புலிக்கொடியை
பறக்கவிட்டு புகழோடு
வாழ்ந்தவன்தான்

புலியென்று
சொன்னாலே
புளியமரம்
ஏறுகின்றான்

மூதறிஞர்
தந்த
முப்பால்
இருக்கையில்

நாற்பால்
என்ற நச்சுப்பால்
குடிக்கின்றான்

நெற்கொடியை
பறக்கவிட்ட
வீரன்தான்

இந்த
வில்லுப்பாட்டு
பாடி
வீணர்களை
புகழுகின்றான்

கங்கைகொண்டவன்தான்
இன்று
காவிரியையும்
இழந்துவிட்டு
கையைப்
பிசைந்து
நிற்கிறான்

முப்படையால்
நான்கு
திசைகளையும்
வென்றவன்

சாதி
சமயம்
கட்சி
என்ற
முப்படையால்
தோற்று
முகவரியை
இழந்துவிட்டான்

தாய்ப்பாலுக்கு
அப்பால்
உன்
தனப்பாலை
குடித்ததொரு
ஒரு
வாய்ப்பால்
வளர்ந்த
மகன்

வஞ்சகப்
போதையின்
நோய்ப்பால்
அருந்தி
நூதனமாய்
சாகின்றான்

உன்னை
மொழிகளுக்கெல்லாம்
முதன் மொழி என்றாய்
அதனால்
உன்னை முதலாக
போட்டு வியாபாரம்
தொடங்கிவிட்டான்

தமிழன்
சீழ்பிடித்த
கொப்புளங்களை
எல்லாம்
தாயின்
மார்பகங்களாய்
நினைக்கிறான்

அன்று நீ
சங்கப்பலகை என்னும்
அரியாசனத்தில் அழகியாய்
வீற்றிருந்தாய்

இன்றோ
எங்கள்
கடைப்பலகையில் கூட
நீ கால்வைக்க
இடமில்லை

கோயிலுக்குள்ளே
நீ குடியேற
முடியவில்லை

வாயிலுக்கு
வெளியே
உன்னை
வைத்துவிட்டு
செல்கின்றார்
செருப்பை போல

வழக்காடு
மன்றத்தில்
குற்றவாளிகளுக்கு
கூட
கூண்டுகள்
உண்டு

நீ
நுழையமட்டும்
அனுமதியில்லை
அம்மா தாயே!
என்னும்
பிச்சைகாரர்
வாயில்
மட்டும்தான்
நீ இருக்கின்றாய்

தெருவெங்கும்
தமிழ் முழக்கம்
செழிக்கச்செய்வோம்
என்ற பாரதியே!

உன் கனவை
நாங்கள்
நிறைவேற்றி
வைத்துவிட்டோம்

வந்து பார்
இப்போது
தமிழ்
தெருவில்தான்
நிற்கிறது

தமிழனுக்கு
தேசிய
கீதமே
தாலாட்டுதான்

மதம்
சாதி
திரைப்படம்
என்று
இவனுக்குத்தான்
எத்தனை
படுக்கைகள்

தமிழன்
ஒன்று
கும்பகர்ணனாக
இருக்கிறான்
இல்லையென்றால்
வீடணாக
இருக்கிறான்

இளைஞனிடம்
விழிப்புணர்ச்சி
வேண்டுமென்றாய்

நாங்கள்தான்
பெண்களை
கண்டால்
விழி புணர்ச்சி
செய்கிறோமே
என்கிறான்

தமிழன்
விழித்திருக்கும்
போது கூட
திரைப்பட அரங்குகள்
என்ற இருட்டறையிலேயே
இருக்கின்றான்

இவனுக்கு
பெரிய திரை
பெரிய வீடு
சின்னத்திரை
சின்ன வீடு

இந்த வீடுபேற்றிற்காக
இவன்
அறத்தையும்
இழந்துவிட்டான்
பொருளையும்
இழந்துவிட்டான

அகமிழந்தான்
பொருளிழந்தான்
ஆன்மாவை
விற்றுவிட்டான்

முகமிழந்தான
தன்னுடைய
முகவரியையும்
இழந்துவிட்டான

எனக்கு
வீடெங்கே
வினையெங்கே

எனக்கேட்டு நின்ற
ஏடெங்கே
எழுத்தெங்கே

இன உணர்வு
பெற்றிருந்த நாடெங்கே
வீடெங்கே

உன் புதல்வர்
கண்டிறிந்த
சூடெங்கே
சொரணை எங்கே
சொப்பனமாய் போனதே

இந்த
நாட்டில்
நடிப்பவர்கள்தான்
தலைவர்களாகிறார்கள்
அல்லது
தலைவர்களாக
இருப்பவர்கள்
நடிக்கிறார்கள

தமிழா
விழித்துக்கொள
இல்லையென்றால்
வெள்ளித்திரைக்கென்று
உன் வேட்டியை
உருவி கொண்டு
சென்றுவிடுவார்கள்…

– கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிக்கோ அவர்கள் கலைஞரைப் புகழ்ந்து எழுதிய கவிதை


என் கவிதை உனக்கு பூச்சொரியும்:
… ஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம்.

முதுகு வலிக்கிறது உனக்கு..
வலிக்காதா…

எத்தனை காலம்தான்
எங்களை சுமக்கிறாய்.

ஒரு நாள்
தமிழிடம் முகவரி கேட்டேன் –
அது மே/பா மு.கருணாநிதி என்றது.

இரட்டை இலை விரித்து
நாட்டையே உண்டவர்களை
எச்சில் இலையாக்கி
குப்பைத் தொட்டியில்
எறிந்தாய் நீ.

நட்சத்திர ஆட்சியை
இனி இந்த நாடு தாங்காது.

சில நட்சத்திரங்கள்
நாட்டை ஆள ஆசைப்படுகிறது…

தமிழா விழித்துக் கொள்…

வெள்ளித் திரை ஆட்சிக்காக
உன் வேட்டியும் உருவப்படாலாம்….
– கவிக்கோ

 

என் ஆசான் கவிக்கோவே!

உனக்கு பிடித்ததெல்லாம்
எனக்கு பிடிக்காமல் போனது
ஏனென்று தெரியவில்லை.

சிலதுகள் மட்டும் பிடிக்கும்.

அவர் தலையில் நீ பனிக்கட்டி வைக்கையில்
எனக்கு ஜலதோஷம் பிடிக்கும்.

உன் உவமைக் கவிதையை படிக்கையில் – எனக்கு
தமிழ்ப் பைத்தியமே பிடிக்கும்.

இருந்தும்
உனக்கு பிடித்ததெல்லாம்
எனக்கு பிடிக்காமல் போனது
ஏனென்று தெரியவில்லை.

அப்துல் கையூம்

சுயம்வரம்

5 ஆண்டுக்கொருமுறை தேர்தல் வரும்போது சிரித்த முகத்தோடு, கும்பிட்ட கைகளோடு தொகுதிக்கு வலம் வந்து வாக்காளர்களை குசலம் விசாரிக்கும் வேட்பாளர்களை தோலுரித்துக் காட்டுகிறார் கவிக்கோ

ஐந்தாண்டுக்கு ஒரு முறை
சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையோடு
குருட்டு தமயந்தி.

நன்றி : பால்வீதி நூலிலிருந்து

கண்ணகியும் கைகேயியும்

 

கண்ணகியின் கதையைச் சொல்ல தலையணை சைஸில் நூல் தேவைப்பட்டது இளங்கோவடிகளுக்கு. அதன் சாரம்சத்தை ஒரு சில வரிகளிலேயே சொல்லி முடித்து விட்டார் கவிக்கோ அவர்கள்.

“பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.

அருஞ்சொற்பொருள் :

பால் நகையாள் = பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்காதவள்
வெண்முத்துப் பல் நகையாள் = முத்துப் போன்ற பற்களை உடையவள்
கால் நகையால் =  காற் சிலம்பினால்;
வாய் நகை போய் = புன்னகை மறைந்துப்போய் 
கழுத்து நகை = மாங்கல்யம் (தாலி)

சிலம்புக் கதையை சொல்ல வந்த கவிக்கோ, நகை என்ற வார்த்தையை வைத்து சொற்சிலம்பம் ஆடியிருப்பது அவரது கவித்திறனைக் காட்டுகிறது        

இதைப்போலவே கம்பன் கழகத்தில் நடந்த ஒரு கவியரங்கில் கைகேயிக்காக கவிதை பாடினார் கவிக்கோ.

“கூனி இவளை வளைக்க
வரங்களுக்காக
நாணை இழுத்தாள்.
அது
அவள் மங்கள நாணையே
வாங்கிக்கொண்டது”

இந்த சொல் விளையாட்டு கவிக்கோவிற்கு கைவந்தக் கலை.

அம்பலம்

‘பித்தன்’ ‘பித்தன்’ என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.

அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.

அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.

நீ பித்தனா? என்று கேட்டேன்.
நீ கல்லா? என்றான்.

நான் காயப்பட்டேன்.

நீ எப்படிப்
பித்தன் ஆனாய்? என்றேன்.

ஒருமுறை தற்செயலாய்
உண்மையைப்
பின் பக்கமாய்ப்
பார்த்துவிட்டேன்.

அப்போது
சகல இரவுகளுக்குமான
சூரியோதயம் நடந்தது.

திரைகள் விலகின.

எதிர்ப்பதங்கள்
கைகோத்து
நடனமாடக்கண்டேன்.

முரண்கள்
முகமூடியைக் கழற்றிவிட்டு
முத்தமிடக் கண்டேன்.

காலமும் இடமும் மறைய
எல்லாம்
ஒன்றாவதைக் கண்டேன்.

உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன.

அந்தத் தருணத்தில்
அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்.
என்றான்.

அவர்கள் ஏன் உன்மீது
கல்லெறிகிறார்கள்? என்றேன்.
நான் அவர்களுடைய
அந்தரங்கத்தின் கண்ணாடி.
அதனால்தான் என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் என்றான்.

ஏன்?என்றேன்.

அவர்கள்
வெளிப்படுவதற்கு
பயப்படுகிறார்கள்.

அவர்கள்
வேடங்களில்
வசிக்கிறார்கள்.

அது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.

வேடம் கலைந்தால்
மேடை போய்விடும்.

நான் அவர்களுடைய
அம்பலம்.

கவனி!
அம்பலம்
என் மேடையல்ல.
நடனம்.

அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள் என்றான்.
நான் உடைந்தேன்.

காலம் காலமாய்த்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.
(கவிக்கோ அப்துல் ரகுமானின் “பித்தன்” கவிதைத் தொகுப்பிலிருந்து)